எல்லாவற்றையும் வாங்க முடியாது பாஜகவுக்கு பிரியங்கா கண்டனம்

எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என்பதை பாஜக ஒரு நாள் உணர்ந்து கொள்ளும் என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி, 16 எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவியதால் கவிழ்ந்தது. 13 காங்கிரஸ், 3 ம.ஜ.த. கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜகவே பேரம் பேசி இழுத்து, ராஜினாமா செய்ய வைத்தது. பின்னர், பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அழைத்து சென்று ஓட்டலில் தங்க வைத்திருந்தனர்.

இதன்பின், ஒரு வாரம் கடந்தும் காங்கிரசால் தனது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் பேசி அழைத்து வர முடியவில்லை. இறுதியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மை இழந்து கவிழ்ந்தது. தற்போது பாஜகவின் எடியூரப்பா ஆட்சியமைக்கப் போகிறார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து வருமாறு:

எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என்பதை பாஜக ஒரு நாள் உணர்ந்து கொள்ளும். எல்லோரையும் இழுத்து விட முடியாது. ஒவ்வொரு பொய்யும் ஒரு நாள் உடைந்து விடும். அவர்களின் அடுக்கடுக்கான ஊழல்களை, அரசியல்சாசன அமைப்புகளை திட்டமிட்டு சீர்குலைப்பதை, பல ஆண்டுகளாக போராடி கட்டமைக்கப்பட்ட நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதை இந்த நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ளும் வரை பாஜகவினரின் பொய்கள் நீடிக்கும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல்காந்தி வெளியிட்ட ட்விட்டில், ‘‘காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்து கூட்டணிக்குள்ளும், வெளியிலும் இருந்து அதை கவிழ்க்கும் குறிக்கோளுடன் செயல்பட்டனர். இந்த கூட்டணியால் அவர்களின் பதவி ஆசைக்கான பாதை அடைக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்த அவர்கள் இப்படி செயல்பட்டனர். இன்று அவர்களின் பேராசை வென்றிருக்கிறது’’ என்று கூறியுள்ளார். ஜனநாயகம். நேர்மை, மக்களின் நம்பிக்கை எல்லாம் போய் விட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>