டிரம்ப் செட்டப் எல்லாம் பண்ண மாட்டார்: அதிபரின் ஆலோசகர் கோபம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியது, ‘செட்டப்’தானா என்று ஒரு நிருபர் கேட்கவே, அதிபரின் ஆலோசகர் எரிச்சலடைந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை கடந்த 22ம் தேதி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமென்று டிரம்ப்பிடம் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த டிரம்ப், ‘‘கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய பிரதமர் மோடியும் இதே போல் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் என்னால் உதவ முடியும் என்றால், நான் மத்தியஸ்தராக செயல்படுவதற்கு விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

ஆனால், டிரம்ப்பின் இந்த பேட்டிக்கு இந்தியா உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் டிரம்ப்பிடம் மோடி அப்படி கேட்டாரா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்கையில், ‘‘பிரதமர் மோடி ஒரு போதும் அப்படி உதவி கேட்பவர் அல்ல. காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா என்றைக்கும் ஒப்புக் கொள்ளாது. இதை பிரதமர் மோடி பல முறை கூறியிருக்கிறார்’’ என்றார்.

இதன்பின், அமெரிக்க வெளியுறவுத் துறை அவசர, அவசரமாக மறுப்பு தெரிவித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக செயல்படத் தயார் என்று டிரம்ப் தனது விருப்பத்தைத்தான் தெரிவித்தார் என்றது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் லாறி குட்லோவிடம் செய்தியாளர் ஒருவர், ‘‘டிரம்ப் சொன்னதை இந்தியா கடுமையாக மறுத்துள்ளதே... மோடியை இழுப்பதற்கு டிரம்ப் சும்மாவாது ‘செட்டப்’ பண்ணிப் பார்த்தாரா?’’ என்று கேட்டார்.

இதைக் கேட்ட லாறி குட்லோ கோபமாகி, ‘‘இது ரொம்ப குரோதமான கேள்வி. அதிபர், ‘செட்டப்’ எல்லாம் செய்ய மாட்டார்’’ என்று பதிலளித்தார்.

More News >>