கர்நாடகாவில் கால்நடை ஏலம் நடத்திய பாஜக சசிதரூர் விமர்சனம்

கர்நாடகாவில் கால்நடைகள் ஏலத்தை பாஜக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நேற்று கவிழ்ந்தது. பதிமூன்று காங்கிரஸ், மூன்று ம.ஜ.த. கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அவர்களை பாஜகவே பேரம் பேசி இழுத்து, ராஜினாமா செய்ய வைத்தது என்று ஆளும்கூட்டணி குற்றம்சாட்டியது. அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அழைத்து சென்று ஓட்டலில் தங்க வைத்திருந்தனர்.

இதன்பின், ஒரு வாரம் கடந்தும் காங்கிரசால் தனது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் பேசி அழைத்து வர முடியவில்லை. இறுதியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மை இழந்து கவிழ்ந்தது. தற்போது பாஜகவின் எடியூரப்பா ஆட்சியமைக்கப் போகிறார்.இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் வெளியிட்ட ட்விட்டில், ‘‘கால்நடைகள் ஏலம் விடுவதை தடை செய்த கட்சி, அதை கர்நாடகாவில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சராக இருந்த சிவக்குமார் மற்றும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், மாற்றுக் கட்சியிடம் ஏமாந்து விடாமல், அடிபணிந்து விடாமல் செயல்பட்ட துணிச்சலையும், கொள்கைப்பிடிப்பையும் நான் பாராட்டுகிறேன். ஒரு நாள் நாம் மீண்டு வருவோம்’’ என்று கூறியுள்ளார்.

More News >>