ராஜ்யசபா : 5 எம்.பி.க்களின் பதவி இன்று நிறைவு வைகோ உள்பட 6 பேர் நாளை பதவியேற்பு
ராஜ்யசபாவில் டி.ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேர் நாளை புதிய எம்.பி.க்களாக பதவியேற்று ராஜ்ய சபாவுக்குள் காலடி எடுத்து வைக்க உள்ளனர்.
ராஜ்யசபா எம்.பி.க்களாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா ஆகியோரது பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த கனிமொழியின் பதவிக் காலமும் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மக்களவைக்கு தேர்வானதால், அவர் ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் இருந்து புதிதாக 6 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது.இதில் திமுக சார்பில் தொமுச தொழிற்சங்க தலைவர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும், கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சேலம் மாவட்டம் மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோரும், கூட்டணியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.6 இடங்களுக்கும் 6 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ததால் அனைவரும் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வானதாக கடந்த 11-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றுடன் பதவி முடிவடையும் எம்.பி.க்கள் 5 பேரும், இன்று ராஜ்யசபா கூடியவுடன் இறுதி உரை நிகழ்த்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, அதிமுகவின் மைத்ரேயன் ஆகியோரின் பேச்சு மிக உருக்கமாக அமைந்தது. தங்கள் பதவிக் காலத்தில் தாங்கள் எடுத்து வைத்த விவாதங்கள், சாதித்த காரியங்களை பட்டியலிட்டும், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுவதாக கண்ணீர் மல்க இருவரும் உருக்கமாக பேசியது எம்.பி.க்கள் அனைவரையும் நெகிழச் செய்தது.
இந்நிலையில், புதிதாக எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வைகோ, அன்புமணி, சண்முகம், வில்சன், முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர். இவர்களில் வைகோ ஏற்கனவே 1978 முதல் தொடர்ந்து 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து கர்ஜித்தவர் ஆவார். தற்போது 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்யசபா செல்லும் வைகோ தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுக்க உள்ளார். பாமகவின் அன்புமணி ராமதாசும் கடந்த 2004-ம் ஆண்டில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.