ldquoஎன்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்..rdquo ஜனாதிபதிக்கு திருநங்கை உருக்கமான கடிதம்

புதுடெல்லி: “எனக்கு வேலைத்தர மறுக்கப்படுவதால் என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என்று ஜனாதிபதிக்கு சென்னையை சேர்ந்த திருநங்கை உருக்கமான கடிதத்தை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் ஷானவி பொன்னுசாமி. ஆணாக பிறந்த இவர், சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவில் 13 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு, வெளிநாட்டில் ஆபரேஷன் செய்துக் கொண்டு பெண்ணாக மாறினார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண் வேலைக்கு ஷானவி விண்ணப்பித்திருந்தார். இதில், அவர் நேர்முகத் தேர்வில் தேர்ச்சியாகும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். ஆனாலும், அவரது பாலினம் காரணமாக, அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, ஷானவி தனக்கு வேலை வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ஷானவி தன்னை கருணைக் கொலை செய்துவிடும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு மத்திய அரசும், ஏர் இந்தியாவும் இதுவரை பதில் அளிக்கவில்லை. எனக்கு வேலை இல்லாத காரணத்தால் அன்றாட சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கை தொடரும் சூழ்நிலையிலும் நான் இல்லை. அதனால், என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த திருநங்கையின் இந்த உருக்கமான கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>