மணல் கொள்ளை வழக்கு சிபிஐ, தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐக்கும், தமிழ்நாடு உள்பட 5 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பாக இன்று(ஜூலை24) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் சீனியர் வக்கீல்கள் பிரசாந்த் பூஷன் பிரணவ் சச்தேவா ஆகியோர் வாதாடினர்.
குறிப்பாக, அந்த 5 மாநிலங்களிலும் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடக்கும் இடங்களை குறிப்பிட்டு, அவை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விளக்கம் கேட்டு, சிபிஐ, மத்திய அரசு மற்றும் அந்த 5 மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.