சிறுபான்மையினர் மீது தாக்குதல் 49 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம்
‘சிறுபான்மையினர், தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
வடமாநிலங்களில் தலித் மக்கள் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது கடுமையாக தாக்குதல்கள் நடக்கின்றன. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்த போதிலும், அவற்றை பாஜக பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. பிரதமர் மோடி இந்த சம்பவங்களுக்கு கண்டனம் மட்டும் தெரிவித்தார்.
இந்நிலையில், சினிமா, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கூட்டாக சேர்ந்து, பிரதமர் மோடிக்கு ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளனர். சினிமா தயாரிப்பாளர்கள் ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பாடகர் சுபா முத்கல், தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மணிரத்னம், ரேவதி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. 2016ம் ஆண்டில் மட்டும் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 840 நடந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 254 மதரீதியான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 579 பேர் காயமுற்றிருக்கிறார்கள். தாக்குதல் சம்பவங்களில் 62 சதவீதம், மக்கள் தொகையில் 14 சதவீதம் மட்டும் கொண்டுள்ள முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்டவை. கிறிஸ்தவர்கள் மீது மட்டும் 14 சதவீத தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக, ஜெய்ஸ்ரீராம் என்ற போர் முழக்கம் போல் முழங்கி, தாக்குதல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, பிரதமர் மோடி வெறும் வார்த்தைகளால் கண்டித்தால் மட்டும் போதாது. இந்த குற்றங்கள் தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
அதே போல், அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை தேசவிரோதி என்று சித்தரிப்பதும் மோசமானது. எப்போது மாற்று கருத்துக்கள் வெளிவருவதுதான் ஜனநாயகத்திற்கு மிகவும் சிறந்தது. மாற்று கருத்து இல்லாமல் ஜனநாயகம் கிடையாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.