தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன் முறையாக தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை!
தென் ஆப்பிரிக்கா அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்று இருந்தன.
இந்நிலையில், நேற்று பொர்ட் எலிசபெர்த் மைதானத்தில் ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபார்முக்கு திரும்பிய ரோஹித் சர்மா 115 ரன்கள் குவித்தார். விராட் கோலி 36 ரன்களும், ஷிகர் தவான் 34 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்கிற நிலையில், களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க ஜோடி ஹசிம் அம்லா, மார்க்ரம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் குவித்து ஓரளவு சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
மார்க்ரம் [32] வெளியேறியதும் தொடர்ந்து ஜே.பி.டுமினி [1], டி வில்லியர்ஸ் [6] என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், அணி சற்று வீழ்ச்சியடைந்தது. பிறகு அம்லா - மில்லர் ஜோடி மீண்டும் உற்சாகம் தந்தது.
இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 127ஆக இருந்தபோது டேவிட் மில்லர் 36 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஓரளவு நின்று ஆடிய க்ளெசன் 39 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
நீண்ட நேரம் களத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு தைரியம் கொடுத்துக் கொண்டிருந்த ஹசிம் அம்லா வெளியேறியதும் அணியின் வீழ்ச்சி உறுதியானது. ஹசிம் அம்லா 71 ரன்கள் எடுத்தார். 42.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது.
இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியதோடு தொடரையும் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.