மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின் - கட்டணம் கூடுதல் என பயணிகள் புகார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென சென்னை விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக பயணிகள் பலர் அவரிடம் புகார் தெரிவித்தார்.
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் நெல்லையில் இருந்து மதுரை வந்த ஸ்டாலின், விமானம் மூலம் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் மெட்ரோ ரயில் நிலையம் சென்ற ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுடன் திடீரென ரயில் பயணம் மேற்கொண்டார். இதனைக் கண்ட ரயில் பயணிகள் பலர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மெட்ரோ ரயில் கட்டணம் கூடுதலாக இருப்பதாகவும், குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.
தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணித்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தச் சிறப்பான மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான் காரணம் என்றார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காவது கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் இல்லையா?