காங்கிரசுக்கு வாக்களித்த 2 பாஜக எம்எல்ஏக்கள் கர் வாப்சி என்று சிந்தியா விமர்சனம்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை 24 மணி நேரத்தில் கவிழ்ப்போம் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சவால் விட்டார். ஆனால், அடுத்த 2 மணி நேரத்தில் பாஜகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வாக்களித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரசில் இருந்து 13 எம்.எல்.ஏ.க்களும், ம.ஜ.த கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தஞ்சமடைந்தனர்.

அவர்களை பாஜக கட்சிதான் இயக்குகிறது என்றும், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க பாஜகவினர் துடிக்கிறார்கள் என்றும் காங்கிரஸ், மஜத கட்சிகள் குற்றம்சாட்டின. கடைசியாக, குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டு விட்டது. அடுத்து ஆட்சியமைக்க பாஜக தலைவர் எடியூரப்பா தயாராகி வருகிறார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள், மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 24 மணி நேரம் போதும் என்று பாஜகவினர் பேசவே அது இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தி விட்டது. மத்தியப் பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

அம்மாநில சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் 230. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. எனவே, மெஜாரிட்டிக்கு 115 இருந்தாலே போதும். காங்கிரஸ் 114 இடங்களை வைத்திருக்கிறது. ஆனால், பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாடி ஒரு உறுப்பினர் மற்றும் 4 சுயேச்சைகள் என்று 121 பேரின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில், சட்டசபையில் நேற்று (ஜூலை24) பாஜக உறுப்பினர் கோபால் பார்கவா பேசுகையில், ‘‘எங்கள் கட்சியின் நம்பர் 1, நம்பர்2 (மோடி, அமித்ஷா) ஆகியோர் ஓ.கே. சொல்லி விட்டால், 24 மணி நேரத்திற்குள் உங்கள் ஆட்சி போய் விடும். அவர்களின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். 7 மாதங்களாக நீங்கள் ஆட்சியில் நீடிப்பதே பெரிய விஷயம்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கமல்நாத், ‘‘உங்கள் நம்பர் 1, நம்பர் 2 ஆகியோர் புத்திசாலிகள். அதனால்தான், அவர்கள் உங்களுக்கு அந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. இப்போதும் சொல்கிறேன். நீங்கள் விரும்பும் நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள்’’ என்று பதிலளித்தார். இதன்பின், சட்டசபையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதில் குரல் வாக்கெடுப்பிற்குப் பதிலாக டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று பகுஜன் சமாஜ் கட்சி சஞ்சீவ் சிங் கோரிக்கை விடுத்தார். இதை சபாநாயகர் பிரஜாபதி ஏற்று, உறுப்பினர்களிடம் பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தினார். எண்ணிக்கைப்படி பார்த்தால் சபாநாயகர் நீங்கலாக அரசுக்கு ஆதரவாக 120 வாக்குகள்தான் கிடைக்க வேண்டும்.

ஆனால், கூடுதலாக 2 வாக்குகள் கிடைத்தன.  அது பாஜக எம்.எல்.ஏ.க்கள் நாராயண் திருப்பதி, சரத் கோல் ஆகியோரின் வாக்குகள்தான். அவர்கள் வெளிப்படையாக காங்கிரஸ் அரசை ஆதரித்து வாக்களித்தனர். இவர்கள் இருவருமே ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர்கள்தான். அங்கு சீட் கிடைக்காத கோபத்தில் பாஜகவுக்கு மாறி, எம்.எல்.ஏ.க்களாக வென்று வந்தவர்கள்.

அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாராயண் திருப்பதி பேசும்போது, ‘‘நான் தாய் வீட்டுக்கு(காங்கிரஸ்) திரும்பியுள்ளேன். சிவராஜ் சவுகான்(பாஜக முன்னாள் முதல்வர்) ஆட்சியில் இருந்த போது நிறைய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், எதுவும் செய்யவில்லை’’ என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘‘எங்கள் ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி, கவிழப் போகிறது என்று தொடர்ந்து கூறி வந்த பாஜகவினருக்கு அவர்களின் 2 எம்.எல்.ஏ.க்களே கண்ணாடியைக் காட்டியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் உண்மை நிலவரத்தைப் பார்த்திருப்பார்கள். தாய் வீட்டிற்கு திரும்பிய 2 எம்.எல்.ஏக்களையும் பாராட்டுகிறேன்’’ என்றார்.

இதன்மூலம், காங்கிரஸ் நினைத்தாலும் பாஜகவில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியும் என்பதை காங்கிரஸ்காரர்கள் காட்டியிருக்கிறார்கள்.

'72 ஆண்டுகளில் 32 முதல்வர்களை கண்ட கர்நாடகா' - 5 ஆண்டு நீடித்தது 4 பேர்; எடியூரப்பா கதை பெரும் சோகம்

More News >>