பாகிஸ்தானில் 30 ஆயிரம் தீவிரவாதிகள் முதல்முறையாக இம்ரான்கான் ஒப்புதல் சர்வதேச அமைப்பை அணுக இந்தியா முடிவு

பாகிஸ்தானில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை ஆயுதப் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

இது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், இந்தியா இது தொடர்பாக சர்வதேச அமைப்பை நாடுவதற்கு முடிவு செய்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து காஷ்மீரை அபகரிக்க வேண்டுமென்று பாகிஸ்தான் நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதற்காக தனது மண்ணில் தீவிரவாதிகள் பயிற்சி பெற வாய்ப்பளித்து, அவர்களை தூண்டி விட்டு காஷ்மீரில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது. ஆனால், பாம்புக்கு பால் வார்த்தது போல், தற்போது பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகள் பயங்கர குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதால், அது அந்நாட்டுக்கே பெரும் பிரச்னையாகி விட்டது.

இந்த சூழ்நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்க தாம் முயற்சிப்பதாக கடந்த ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் கூறி வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான்கான், அமைதிக்கான அமெரிக்க இன்ஸ்டியூட்டில் நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெஷாவர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பின்பு, பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நேஷனல் ஆக்‌ஷன் பிளான் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், நான் ஆட்சிக்கு வரும் வரை அதை யாரும் செயல்படுத்தவில்லை. எனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் வந்த பிறகுதான் துணிவுடன் முயற்சி மேற்கொண்டிருக்கிறேன்.

பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி பெற்ற 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரில் பயிற்சி பெற்று வந்து பாகிஸ்தானில் இயங்குகிறார்கள். காஷ்மீரில் மட்டும் ஆயிரம் முகாம்களில் பயிற்சி பெற்று, பாகிஸ்தானில் இயங்குகிறார்கள். செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்திற்குப் பிறகு குறைந்தது 40 தீவிரவாத இயக்கங்களாவது செயல்படத் தொடங்கின என்பதை மறுக்க முடியாது’’ என்றார்.

பாகிஸ்தான் பிரதமரே வெளிப்படையாக இப்படி 40 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியாவுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை அளித்தாலும், இது வரவேற்கத்தக்க விஷயம் என்று கருதுகிறது. இதைக் கொண்டு, பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் சர்வதேச அமைப்பிடம்(எப்ஏடிஎப்), இந்தியா முறையிட திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும், அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிடம் மோடி உதவி கேட்கவில்லை; டிரம்புக்கு மத்திய அமைச்சர் மறுப்பு

More News >>