ராஜ்யசபா தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் - வைகோ உறுதிமொழி
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக எம்.பி.க்கள் இன்று தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்யசபாவில் காலடி வைத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என உரத்த குரலில் உறுதிமொழி வாசித்த போது எம்.பி.க்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, அதிமுகவின் மைத்ரேயன், ரத்தினவேல்,லட்சுமணன், அர்ஜுனன் ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் கனிமொழி மக்களவை எம்.பி.யாக தேர்வானதால் ஏற்கெனவே ராஜினாமா செய்து விட்டார்.
இந்த 6 இடங்களுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியின்றி புதிய எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1978 முதல் 1996 வரை தொடர்ந்து 18 ஆண்டுகளாக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த வைகோ, சிறந்த பார்லிமென்டேரியன் என்ற பேர் பெற்றவர். இதனால் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்.பி.யாகி இன்று பதவியேற்றார். பதவியேற்க வைகோவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது உறுதி மொழி எடுத்துக் கொண்ட வைகோ, இந்திய இறையாண்மையை பற்றி நடப்பேன் என்று உறுதிபடத் தெரிவித்த போது எம்.பி.க்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல் திமுகவை சேர்ந்த சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். பின்னர் ராஜ்யசபாத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
தீர்ப்பை பார்த்து எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது; வைகோ பரபரப்பு பேட்டி