3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் அதிரடியை ஆரம்பித்தார் கர்நாடக சபாநாயகர்

கர்நாடகாவில் ஒரு சுயேட்சை மற்றும் 2 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் என 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நடப்பு சட்டசபையின் ஆயுளான மே 2023 வரை இவர்கள் 3 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் சபாநாயகர் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரசின் 12 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் 3 பேர் 15 எம்எல்ஏக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இவர்களுடன் சுயேட்சை எம்எல்ஏக்களான நாகராஜ், சங்கர் ஆகிய இருவரும் அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர்.

இதனால் குமாரசாமி தலைமையிலான காங்- மஜத கூட்டணி அரசுக்கு நெருக்கடி கற்பட்டு, கர்நாடக அரசியலில் 2 வாரத்திற்கும் மேலாக பெரும் குழப்பம் நிலவியது. மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான குமாரசாமி, கடந்த வாரம் வியாழக்கிழமை, சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்காத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு 15 எம்எல்ஏக்களுக்கும் இரு கட்சிகளும் கொறடா உத்தரவு பிறப்பித்தன. பங்கேற்காவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் எதிர்ப்பு முடிவை கைவிட்டு, பெங்களூரு திரும்புவார்கள் என எதிர் பார்த்து வாக்கெடுப்பு நடத்துவதை 4 நாட்கள் வரை காலம் கடத்தியும், மும்பையை விட்டு அவர்கள் நகரவில்லை. இதனால் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பாரா? அல்லது தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பாரா? என்பது தெரியாத நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரும் விவகாரத்தில் பாஜக மேலிடம் இதுவரை பச்சைக் கொடி காட்டவில்லை.

காங்கிரஸ் மற்றும் மஜதவும் சபாநாயகரின் முடிவையே எதிர்பார்த்திருந்ததால், கர்நாடக அரசியலில் பெரும் அமைதி நிலவியது.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், முதற்கட்டமாக 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று மாலை அதிரடி முடிவை அறிவித்துள்ளார். சுயேட்சை எம்எல்ஏவாக வெற்றி சங்கர், கடந்தாண்டே தான் காங்கிகிரசில் இணைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனைச் சுட்டிக் காட்டிய சபாநாயகர், கட்சித் தாவல் சட்டப்படி அவரை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் சங்கர் பங்கேற்காமல் புறக்கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களான ரமேஷ் ஜர்கிகோலி, மகேஷ் குமட்டாகாலி ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த இருவரும் முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்றும், தம்மிடம் முன் அனுமதி பெறாமல், தாம் இல்லாத நேரம் அலுவலகத்திற்கு வந்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் காணாமல் போய்விட்டார் என்றும் தவறான தகவலை கொடுத்துள்ளனர். இதனால் 10-வது அட்டவணைப்படி தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்களும் நடப்பு சட்டப் பேரவையின் ஆயுள் காலமான மே 2023 வரை தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் சபாநாயகர் அறிவித்ததுடன், மற்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் அடுத்தடுத்து முடிவுகளை அறிவிக்கப்போவதாக தெரிவித்தார். சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கை கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>