ஒரு நாள் போட்டி விடை பெறுகிறார் இலங்கை வேகப்புயல் மலிங்கா- வங்கதேசத்துடன் இன்று கடைசி மோதல்

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.கொழும்புவில் வங்கதேசத்துடன் இன்று நடைபெறும் முதலாவது ஒரு போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை வீரர்கள் முனைப்புடன் உள்ளனர்.

35 வயதான மலிங்கா, இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இலங்கையின் முத்தையா முரளீதரன் (523), சமீந்தா வாஸ் (399) ஆகியோருக்கு அடுத்து விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மலிங்கா 3-வது இடம் பெற்றுள்ளார்.கடந்த 2007 உலக கோப்பையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு உரியவர்.

ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டிலேயே மலிங்கா ஓய்வு பெற்றிருந்தார். தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் மலங்கா வெளியிட்டிருந்தார்.

அதன்படி 3 ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி, கொழும்புவில் இன்று முதலாவது போட்டியில் ஆடுகிறது. இந்தப் போட்டியே மலிங்கா விளையாடும் கடைசிப் போட்டியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி, ஓய்வு பெறும் அணியின் வீரர் மலிங்காவை வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை அணியின் வீரர்கள் முனைப்பாக உள்ளனர்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடவுள்ளதாக மலிங்கா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 2020-ல் நடைபெற உள்ள டி-20 உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்று ஆடுவேன் என்றும் மலிங்கா தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் ; 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு

More News >>