இன்று கார்கில் போர் நினைவு தினம் பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?
கார்கில் போர் நினைவு தினம் இன்று(ஜூலை26) அனுசரிக்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் படைகள் ரகசியமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய போது, அதை சரியான சமயத்தில் கண்டுபிடித்து அவர்களை விரட்டியடித்து போரில் வென்றது இந்தியா.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரி்ல் இருந்து 205 கி.மீ. தொலைவில் லடாக் மாவட்டத்தில் கார்கில் உள்ளது. இந்தியாவில் இருந்து காஷ்மீரை எப்படியாவது கைப்பற்றிட வேண்டுமென்று நீண்ட காலமாக பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. கடந்த 1999ம் ஆண்டில் இதற்காக ஒரு திட்டம் போட்டது அந்நாட்டு ராணுவம். அதாவது, தீவிரவாதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர தாக்குதல்களை நடத்தினால், அது சர்வதேச அளவில் கவனிக்கப்படும்.
அப்போது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கி தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பதே அந்த திட்டம்.
இதன்படி, அந்நாட்டு துணை ராணுவத் தளபதி அர்ஷத் ரஷீத் தலைமையில் ஒரு படையை இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் போல் ஊடுருவச் செய்தது. அவர்களில் சிலர் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய ராணுவ வீரர்களை தாக்கினர். அப்போது இந்திய ராணுவத்தினர், அவர்களை தீவிரவாதிகள் என்றே கருதினர். இதனால், அவ்வப்போது பதிலடி கொடுத்து விட்டு அலட்சியமாக இருந்தனர். அதன்பின்பு, கார்கிலுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ முகாம்களை தாக்கினர்.
அப்போது அவர்களுடன் இந்திய வீரர்கள் சண்டை போட்டு விரட்டியடித்தனர். அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களைப் பார்த்த போது, அவை அவர்களை காட்டிக் கொடுத்தது. இதையடுத்து, இந்திய அரசு, பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அதை அப்படியே மறுத்தார். அதன்பின்பு, ‘இந்தியப் பிரதமர் வாஜ்பாய் போனில் தொடர்பு கொண்ட பிறகுதான் எனக்கு கார்கிலில் நடக்கும் விஷயமே தெரியும்’’ என்று பின்னாளில் அவர் தெரிவித்தார்.
கார்கிலில் பாகிஸ்தான் படைகள் ஊடுருவி வருவதை நமது ராணுவத்தின் மூலம் அறிந்த அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய், உடனடியாக முழு அளவில் போரை நடத்த அனுமதித்தார். இதையடுத்து, கார்கிலில் இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக தாக்கத் தொடங்கியது. 1999ம் ஆண்டு மே 3 தொடங்கிய போர், ஜூலை 26ம் தேதி வரை நடைபெற்றது.
இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையை விட்டு முழுவதுமாக ஓடி விட்டனர். ஜூலை 26ம் தேதியன்று இந்திய வீரர்கள், கார்கிலில் வெற்றிக் கொடியை நாட்டினர். இதன்பின்னர், ராணுவத்தில் உளவுப் பணிகள் சரியாக இல்லாததால்தான், கார்கிலில் பாகிஸ்தான் படை வீரர்கள், தீவிரவாதிகள் போர்வையில் ஊடுருவியதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் கோட்டை விட்டோம் என்று ராணுவத் தளபதிகள் கூறினர். இதையடுத்து, ராணுவ உளவுப் பிரிவு, தொழில்நுட்ப உளவுப் பிரிவு, என்டிஆர்ஓ ஆகிய அமைப்புகள் கடந்த 2002ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டன.
கார்கில் போரின் மூலம் இந்தியா, ‘ராணுவத்தில் உளவுப் பணிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்பதை உணர்ந்து கொண்டது. அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்திய ராணுவம் தற்போது மிகவும் பலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டோனிக்கு ராணுவப் பயிற்சி; காஷ்மீருக்கு செல்கிறார்