சென்னையில் பெய்த கன மழை 9.5 டிஎம்சி தண்ணீர் வீணாகியது

சென்னையில் 55 நாட்களில் பெய்த மழை நீரை சேமித்து வைத்திருந்தால் சென்னை மக்களின் 150 நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திருக்கலாமாம். ஆனால், மழை நீரை முறையாக சேகரிக்காததால், 9.5 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு போயிருக்கிறது.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தை யாரும் மறந்து விட முடியாது. மக்களை சரியாக உஷார்படுத்தாமல், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் மறக்க முடியாது. இது நிகழ்ந்தது ஜெயலலிதா ஆட்சியில். அதே போல், மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை கட்டாயப்படுத்தி, வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து கட்டடங்களிலும் மழை நீரை சேகரிக்க வைத்ததும் ஜெயலலிதா ஆட்சியில்தான்.

ஆனால், இது போன்று அனைத்து விஷயங்களையும் அந்தந்த காலகட்டத்தில் மட்டும்தான் மக்கள் பேசுகிறார்கள். அதற்கு பின் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதிமுக, திமுக ஆட்சியாளர்களும் கவலை கொள்வதில்லை. சென்னையைச் சுற்றி ஒரு காலத்தில் ஏராளமான நீர்நிலைகள் இருந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்களாக மாறி விட்டன.

இன்னொரு புறம், நிலத்தின் மேற்பரப்பில் விழும் தண்ணீரில் ஒரு சொட்டு கூட மண்ணுக்குள் இறங்கி விடாத அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகளையும், எலக்ட்ரானிக் குப்பைகளையும் போட்டு நிரப்பி விட்டோம். இதனால், கனமழை கொட்டினாலும் நிலத்தடி நீர்மட்டம் உயராத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரை சென்னையில் அதாவது, 1189 கி.மீ. சுற்றளவுக்கு 221 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் 60 முதல் 70 சதவீத மழை நீரை நாம் சேகரித்து வைத்திருந்தாலே சென்னை மக்களுக்கு 150 நாட்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது, கடந்த 55 நாட்களில் பெய்த மழையால் கிடைத்த தண்ணீரில் 9.5 டி.எம்.சி தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலந்து விட்டது.

அனைத்து கட்டடங்களிலும் முறையாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரித்து வந்திருந்தால் இதில் சிறிய அளவு தண்ணீராவது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பயன்பட்டிருக்கும். கடந்த 55 நாட்களில் பெய்த மழையால் கிடைத்த தண்ணீர் அவ்வளவும் மழை நீர் வடிகால்கள் மூலம் வீணாகப் போய் விட்டது என்று சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் ஜனகராஜன் கூறியிருக்கிறார்.

மழை நீடிக்கும் : சென்னையில் நேற்று (ஜூலை 25) நுங்கம்பாக்கத்தில் 26.4 மி.மீ, மீனம்பாக்கத்தில் 29.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்காலத்தில் மழலைச்செல்வங்களின் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

More News >>