கர்நாடகாவில் ஜனநாயகத்தை சிதைத்து விட்டது பாஜக காங்.கண்டனம்
கர்நாடகாவில் போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக சிதைத்து விட்டதாகவும், ஆளுநரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும் கர்நாடக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலையிலும், பாஜக உரிமை கோரிய அடுத்த நிமிடமே, ஆளுநர் வஜுபாய் வாலாவும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததற்கு கர்நாடக காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து கடும் கண்டனங்களை பதிவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மெஜாரிட்டி பலம் இல்லை என்று தெரிந்தும் பாஜக ஆட்சியமைக்க கோரி, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்து விட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய மாநில ஆளுநரும் இதற்குத் துணை போயுள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு பதிவில், ஊழல் சாம்ராஜ்யம் என அழைக்கப்படும் எடியூரப்பா, ஊழல் பணத்தில் குதிரை பேரம் நடத்தி வெற்றி பெற நினைக்கிறார். அவருடைய 3 ஆண்டு கால ஆட்சியில் கர்நாடகம் சூறையாடப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. மீண்டும் அதே வரலாறு திரும்புகிறது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமய்யாவும், பாஜகவையும், ஆளுநரையும் கடுமையாக சாடியுள்ளார். மெஜாரிட்டியே இல்லாத ஒரு கட்சியை ஆட்சியமைக்க அரசியலமைப்பு சட்டத்தின் எந்த விதி அனுமதி கொடுக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கர்நாடக சட்டப்பேரவையை பாஜகவும் ஆளுநரும் சேர்ந்து கொண்டு சோதனைக் கூடமாக்க நினைப்பது வெட்கக்கேடானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் சட்டை செய்யாத பாஜகவோ, 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் இப்போதைக்கு எங்களுக்கு மெஜாரிட்டி உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று கூறியுள்ளது.
இதற்கிடையே மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று தனி விமானத்தில் பெங்களூரு திரும்புவதாகவும், எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்' அதிரடியை ஆரம்பித்தார் கர்நாடக சபாநாயகர்