உங்கள் வயது முப்பதா? வாழ்வில் வெற்றிபெற சில ஆலோசனைகள்
'சனிக்கிழமையா... மதியம் இரண்டு மணி வரை உறங்கலாம்' 'புதுசா மார்க்கெட்ல இந்தப் பொருள் வந்திருக்கா... வாங்கிரலாம்" வாலிப வயதை பெரும்பாலும் இப்படித்தான் கழிக்கிறோம். கட்டுப்பாடற்ற, மனம்போலான வாழ்க்கை! ஆனால், எப்போது இஷ்டப்படியே வாழ்ந்துவிட முடியாதல்லவா?
முப்பது என்பது பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தி, தனிப்பட்ட மற்றும் வேலை தொடர்பான குறிக்கோள்களை நிறைவேற்றும் வயதாகும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் வயது முப்பதுகள்தாம்! வாழ்வில் வெற்றிபெற செய்யவேண்டியவை குறித்து சில குறிப்புகள்...
புகை பிடிப்பதை நிறுத்துங்கள்
முப்பது வயதாகிவிட்டதா? புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டுவிடுங்கள். இதுவரை புகையினால் உங்கள் உடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய இயலாவிட்டாலும், தொடர்ந்து புகை பிடிப்பவரைக் காட்டிலும் குறைவான பாதிப்புகளோடு தப்பித்துக்கொள்ள வழி உண்டு. ஆய்வுகள் 40 வயதுக்கு முன்பாக புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுபவர்களின் நலத்துக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைவுதான் என்று கூறுகின்றன.
தினமும் ஒரே நேரம் உறங்குங்கள்; விழித்திடுங்கள்
வார இறுதி விடுமுறையா? அன்று அதிகநேரம் உறங்குவோம் என்று தூங்குவது ஆரோக்கியமான வழக்கம் அல்ல. வாரத்தில் சில நாள் மட்டும் அதிகமாக தூங்கினால்கூட உங்கள் உடல் கடிகாரம் தொந்தரவுக்குள்ளாகும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் உறங்கி, வெவ்வேறு நேரங்களில் எழுவதால் சரியான ஒத்திசைவு இன்றி உடல் கடிகாரம் திகைக்கும். ஆகவே, காலையில் எழுவது இரவில் படுக்கைக்குச் செல்வது ஆகியவற்றை ஒரே ஒழுங்கில் செய்யுங்கள். பிற்காலத்தில் உறக்கத்தில் பிரச்னைகள் வராமல் இருக்க இது உதவும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
"முடிந்த அளவுக்கு நகர்ந்து கொண்டே இருங்கள்" என்று உடல்நல வல்லுநர்கள் கூறுகிறார்கள். நடைப்பயிற்சி, நீண்ட தூரம் நடத்தால், மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், எடை தூக்குதல், நீந்துதல் போன்றவற்றுள் ஏதாவது ஒரு பயிற்சியிலாவது தொடர்ந்து ஈடுபட வேண்டும். உடல் அசைந்து கொண்டே இருப்பது ஆரோக்கியமாக வாழ உதவும். முப்பதுகளின் இறுதி பாதியில் உடல் தசையின் நிறை குறைய ஆரம்பிக்கும். ஆகவே, உடற்பயிற்சி தவறாது செய்வது நல்லது. ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட உங்களுக்குப் பிரியம் அல்லது வசதி என்று சிந்தித்து அதை செய்தால், இடைவிடாது தொடர்வது எளிது.
டயரி எழுதுங்கள்
'டயரி எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆளா?' என்றெல்லாம் யோசிக்காமல், உங்கள் சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவற்றை எழுதி வைக்கலாம். இது பெரிய அளவில் மன உளைச்சல் ஏற்படாமல் காப்பதோடு, இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ள உங்கள் தயார்படுத்தும்.
சேமிக்க ஆரம்பியுங்கள்
வாழ்வில் எந்த வயதிலிருந்து சேமிக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு எதிர்காலம் சிக்கலில்லாமல் அமையும். இதுவரை பணத்தை சேமிக்கும் பழக்கம் இல்லாதிருந்தால், முப்பது வயதுக்குப் பிறகு கண்டிப்பாக அப்பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வாழ்நாள் கனவினை தொடங்குங்கள்
ஒவ்வொருவரும் வாழ்நாள் கனவு என்று ஒன்றாவது கொண்டிருக்கவேண்டும். வீடு கட்டுவது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது, புத்தகம் எழுதுவது போன்று உங்கள் விருப்பத்திற்கேற்ப ஏதாவது ஒன்றை வாழ்நாள் கனவாக கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள். அது மனதில் உற்சாகத்தை பிறப்பிக்கும்.
இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்
'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொண்டால் அது மிகப்பெரிய நன்மை. நமக்கென்று இருப்பவற்றை எண்ணி மகிழ்ச்சி கொண்டால், எதிர்மறை எண்ணங்கள் குறையும். ஆகவே, எனக்கு இது இருக்கிறது; அது இருக்கிறது என்று இருப்பதில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
அனைவரையும் திருப்திபடுத்த வேண்டாம்
எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும்; மற்றவர்கள் மனங்கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை விட்டுவிடுங்கள். முப்பது வயது தாண்டியதும் உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்பு வட்டத்தில் இருப்பவர்களை கவனமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். உங்களை புரிந்துகொண்டவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுங்கள்; நண்பர்களாக்கியவர்களை புரிந்துகொள்ளுங்கள். எல்லோரையும் திருப்திபடுத்த முயற்சித்தால் மனபாரம்தான் அதிகமாகும். ஆகவே, நட்பு மற்றும் தொடர்பு வட்டத்தை கருத்துடன் உருவாக்குங்கள்.
மற்றவரோடு ஒப்பிடுவதை நிறுத்துங்கள்
தம்பி, அண்ணன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்யக்கூடியவற்றை உங்களால் செய்ய இயலாவிட்டால் மன வருத்தமடையாதீர்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தால் வாழ்வில் நிம்மதி இருக்காது. மற்றவர்கள் வாழ்வை கொண்டு நம் வாழ்வை அளவிடக்கூடாது. அது உங்கள் இலக்குகளை அடைவதற்கு எந்தவிதத்திலும் உதவாது. ஆகவே, மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட்டுவிடுங்கள்.
உங்களை நீங்களே மன்னியுங்கள்
கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளை நீங்களே மன்னித்துவிடுங்கள். அப்போதுதான் குற்றவுணர்ச்சி மறையும். உங்கள் பெலவீனங்களின் காரணமாக செய்த தவறுகளை மன்னித்து, இனிமேல் அதுபோன்ற தவற்றினை செய்யக்கூடாது என்று பாடம் படித்துக்கொள்ளுங்கள். அப்போது மனம் இலகுவாகும்.