எடை குறைப்பதற்கு செய்யக்கூடாத விஷயங்கள்
'டயட்' என்ற பெயரில் சில உணவு ஒழுங்குமுறைகளை கடைபிடித்து எடையை குறைக்கும் சிலருக்கு, குறைந்த வேகத்திலேயே உடல் எடை அதிகமாகிவிடுவதை காண முடிகிறது.
உடல் எடையை குறைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் பலரும் 'என்ன டயட் சாப்பிடலாம்?' என்றுதான் தேடுகிறார்கள். உணவு ஒழுங்குமுறை உள்ளிட்ட நான்கு விஷயங்களை பயன்படுத்தி உணவு எடையை குறைக்கக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை எவை தெரியுமா?
டயட் வேண்டாம்
'டயட்' என்னும் உணவு ஒழுங்குமுறை, சில உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, சில உணவு வகைகளை மாத்திரமே சாப்பிடும்படி கூறுகிறது. முழுமையான உணவினை சாப்பிடுவதற்குப் பதிலாக, ஏதாவது ஒன்றை மட்டுமே உண்டுகொண்டு இருக்கிறோம். சில உணவு ஒழுங்குமுறைகள் புரோட்டீன் என்னும் புரதம் மற்றும் கொழுப்பு அடங்கிய உணவு பொருள்களை மட்டுமே சாப்பிட்டுவிட்டு, கார்போஹைடிரேடு என்னும் மாவு பொருளை முற்றிலும் தவிர்க்கும்படி கூறும். 'கொழுப்பு, கார்போஹைடிரேடு என்னும் பிழம்பில்தான் எரிகிறது' என்று உயிரிவேதியல் கூறுகிறது. கார்போஹைடிரேடு என்னும் மாவுச்சத்து இருந்தால்தான், கொழுப்பு ஆற்றலாக மாற முடியும். ஆகவே, நம் உடலில் சேரும் கொழுப்பு கரைவதற்கு கார்போஹைடிரேடு கண்டிப்பாக அவசியம். சில உணவு ஒழுங்குகள், 'குறைந்த கொழுப்பு' (Low-fat) என்பதை வலியுறுத்துகின்றன.
எண்ணெய், நெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகளை வகுத்து வைத்துள்ளன. நீராவியில் வெந்த அல்லது அவிக்கப்பட்ட உணவு பொருள்களை மட்டுமே உண்பது இவ்வகை. கொழுப்பை முற்றிலும் தவிர்த்துவிட்டால் அது சமச்சீர் உணவாக இருக்காது. ஆகவே, ஏதாவது ஒரு குறிப்பிட்ட வகை உணவு முறையை மட்டுமே கடைபிடித்து உடல் எடையை குறைக்காதீர்கள். கார்போஹைடிரேடு, புரதம், கொழுப்பு ஆகிய எல்லாம் அடங்கிய சரிவிகித உணவினை சாப்பிடவேண்டும்.
ஆனால், பண்டிகைகள், பயணம், அன்றாட வாழ்க்கை உருவாக்கும் மனஅழுத்தம், செய்து முடிக்கவேண்டிய வேலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சாப்பிட வேண்டும்.உணவு, உடற்பயிற்சிகளை அடிக்கடி மாற்ற வேண்டாம் சிலர், 'எடுப்பார் கைப்பிள்ளையாக' மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து தாங்களும் உணவு பழக்கத்தை மாற்றுவது, உடற்பயிற்சிகளை மாற்றுவது என்று அடிக்கடி குழம்பிக்கொண்டே இருப்பார்கள். 'இதை சாப்பிடுங்கள்; அதை சாப்பிடுங்கள்' என்று மற்றவர்கள் வழிகாட்டுவதை கொண்டு மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
உடல் நலம் என்பது, உடற்பயிற்சி மற்றும் உணவு ஆகியவை இணைந்த ஒன்று. தொடர்ந்த பயிற்சி மற்றும் ஒழுங்கான உணவு ஆகியவற்றால் நாளடைவில் பெறுவதே தகுதியான உடல்நலம். ஆகவே, உங்களுக்கு பிடித்த திரையுலக பிரபலம் செய்வதையெல்லாம் அல்லது புதிதாக வந்த பயிற்சிகளையெல்லாம் நீங்களும் செய்யவேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். உங்கள் உடலுக்கு என்னென்ன தேவை என்பதை தெளிந்து அவற்றை மட்டும் கடைபிடியுங்கள்.
எடையை மட்டும் பார்க்காதீர்கள்
உங்கள் உடல் எடை மற்றுமே உடல் தகுதியை காட்டும் காரணி அல்ல என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை காட்டிலும் சற்று அதிகமாக நீங்கள் இருக்கக்கூடும். ஆனாலும், நோயற்றவர்களாக, போதிய ஆற்றல் உள்ளவர்களாக, எளிதாக நடமாடக்கூடியவர்களாக இருப்பீர்கள். ஒல்லியாக இருக்கும் ஒருவர், நல்ல உடல் தகுதியுடன், தினசரி வீட்டு வேலைகளை செய்து, அலுவலகத்தில் பணி செய்து, மருந்து சாப்பிடாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதை பார்ப்பீர்கள். அதேபோன்று ஒல்லியாக இருக்கும் இன்னொருவருக்கு மாரடைப்பு வந்ததை கேள்விபடக்கூடும். உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம், உடலின் எடையை பொறுத்தது அல்ல.
எப்படி பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் காட்டி, பெற்றுக்கொண்ட அறிவை அளவிடாதோ அதேபோன்றதுதான் எடை பார்க்கும் இயந்திரம், எடையை குறிக்குமேயன்றி, ஆரோக்கியத்தை குறிக்காது. ஆகவே, உடல் எடையை மட்டும் கருதாது, ஆரோக்கியத்தை பேணுவதே அவசியம்.தூக்கத்தை அலட்சியம் செய்யாதீர்கள்
இப்போது அதிகமாக மின்னணு சாதனங்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் மொபைல் போன், பார்க்கும் தொலைக்காட்சி இவற்றிலிருந்து வரும் வெளிச்சம், தூக்கத்தை தூண்டும் மெலட்டோனின் சுரப்பதை தாமதப்படுத்தும். மாறாக, வெளிச்சத்தினால் உடல் விழிப்பு நிலையிலேயே இருக்கும். உறக்கம் இல்லையென்றால் உடலின் வளர்சிதை மாற்றம் தடுக்கப்படும். நொதிகள் என்னும் ஹார்மோன் அளவும் மாறும். ஆகவே, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே எல்லா சாதனங்களின் இயக்கத்தையும் நிறுத்திவிடவேண்டும்.