நெட்ஃபிளிக்ஸ் 199: இந்திய சந்தையை கைப்பற்ற அதிரடி!
மொபைல் போன் பயனர்களை கவரும் வண்ணம் மாதம் ரூ.199 சந்தாவை நெட்ஃபிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களை பார்க்கக்கூடிய செயலியாகும். 191 நாடுகளில் 15 கோடியே 10 லட்சம் பேர் இச்செயலிக்கு சந்தாதாரர்களாக உள்ளனர். இந்தியாவில் இதற்கான அடிப்படை மாத சந்தா ரூ.499 ஆகும். தற்போது மொபைல் போன் பயனர்களை ஈர்க்கும்படியாய் பாதிக்கும் குறைவான கட்டணத்தை மொபைல் பயனர்களுக்கு அறிவித்துள்ளது.
சந்தாதாரர் எண்ணிக்கையில் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ இவற்றுக்கு அடுத்த நிலையில்தான் நெட்ஃபிளிக்ஸ் உள்ளது. இந்திய போட்டியாளர்களான லைவ் டிவி, ஆல்ட் பாலாஜி, ஸீ5 நிறுவனங்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நெட்ஃபிளிக்ஸ், சீன சந்தை மூடப்பட்ட நிலையில் இந்தியாவை குறி வைத்துள்ளது. ஷாரூக்கான் உள்ளிட்ட பிரபலங்களைக் கொண்டு சொந்தமாக ஹிந்தி நிகழ்ச்சிகளையும் நெட்ஃபிளிக்ஸ் அளிக்கிறது.