பெயரை மாற்றிய எடியூரப்பா இந்த முறையாவது ஆட்சி தப்புமா?

கர்நாடக முதல்வராக 3 முறை பதவி வகித்த எடியூரப்பா ஒரு முறை கூட 5 ஆண்டு பதவிக்காலத்தை முடித்ததில்லை. இந்த முறையாவது முழு பதவிக்காலத்தை முடிக்க வேண்டுமென்று தனது பெயரை நியூமராலஜிப்படி ஸ்பெல்லிங் மாற்றிக் கொண்டார்.

இன்று மாலை 6.30 மணிக்கு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. எடியூரப்பா வரும் 29ம் தேதியன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருக்கிறார். அதில் தனது பெரும்பான்மையை நிரூபித்த பின்பு, புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடியூரப்பா ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்துள்ளார். ஆனால், ஒரு தடவை கூட முழுமையாக 5 ஆண்டு பதவிக்காலத்தை முடித்ததில்லை. இந்நிலையில், இந்த முறையும் அவரால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா, அப்படியே மெஜாரிட்டியை நிரூபித்தாலும் மீதமுள்ள 4 ஆண்டு பதவிக்காலத்தை முடிப்பாரா என்பது தெரியவில்லை. அதனால், அவர் இன்று பதவியேற்கும் முன்பாக காடு மல்லேஸ்வரர் கோயிலுக்கு சென்று பயபக்தியுடன் வழிபட்டு வந்தார். மேலும், ஜோசியர்கள் பேச்சைக் கேட்டு தனது பெயரில் ஸ்பெல்லிங்கை மாற்றினார். அதாவது, Yeddyurappa என்பதை Yediyurappa என்று மாற்றிக் கொண்டார். அதை தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவில் ஏனோ டெல்லி பாஜக தலைவர்கள் பங்கேற்கவில்லை. கர்நாடக பாஜகவின் மேலிடப் பார்வையாளர் முரளிதர்ராவ் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பின்பு, உடனடியாக எடியூரப்பா கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. கட்சித் தலைமையிடம் இருந்து அனுமதி கிடைப்பதற்காக காத்திருந்தார். அப்போது, பாஜகவில் 75 வயது கடந்தவர்கள் எந்த பதவிக்கு வரக் கூடாது என்று விதிமுறை வைத்திருக்கிறார்கள். அதனால்தான், மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி தொடங்கி, கடைசியாக முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வரைக்கும் தேர்தலில் போட்டியிடக் கூட வாய்ப்பு தரப்படவில்லை. சுமித்ரா மகாஜனுக்கு 76 வயது. எடியூரப்பா அவரை விடவே நான்கு மாதங்கள் பெரியவர்.

அதனால், எடியூரப்பாவுக்கு பதிலாக வேறு யாராவது முதலமைச்சர் ஆக்கப்படுவார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காகத்தான் 2 நாள் காத்திருந்ததாக தெரிய வந்துள்ளது. எடியூரப்பாவுக்கு மட்டும் 75 வயது கட்டுப்பாடு பொருந்தாதா என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அவர் இப்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு தலைவர். எனவே, அந்த வி்தியைப் பார்க்கக் கூடாது’’ என்றார். ஆனால், கடந்த 2014ல் பாஜக சார்பில் அத்வானி, ஜோஷி ஆகியோர் எம்.பி.க்களாகவே இருந்தனர். ஆனால், அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படவில்லை. ‘அவர்கள் எம்பியாக இருந்தார்களே தவிர, அவர்கள் தலைவர்கள் இல்லையா?’ என்ற கேள்வியை நட்டாவிடம் செய்தியாளர்கள் கேட்கத் தவறி விட்டனர். கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார்?

More News >>