அரசியலில் நிரந்தர நட்புமில்லை பகையுமில்லை எடியூரப்பாவுக்கு வலிய ஆதரவு தர மஜத முடிவு?

அரசியலில் நட்போ , பகையோ நிரந்தரமில்லை என்பது கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஏகப் பொருத்தமாகிவிட்டது போலும். பாஜகவின் சதியால் ஆட்சியை இழந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் 14 மாத கால ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. ஆட்சியைக் கவிழ்க்க கண் கொத்திப் பாம்பாக காத்துக் கிடந்த பாஜகவின் எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 15 பேரை வளைத்து, நினைத்ததை சாதித்து விட்டார். அதே போன்று எடியூரப்பாவின் வயதையும், ராசியையும் காரணம் காட்டி, அவரை மீண்டும் முதல்வராக்க பாஜக மேலிடம் யோசித்த வேளையில் அதையும் சரிக்கட்டி விட்டார்.

திடுதிப்பென ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி, ஒரே நாளில் முதல்வராகவும் எடியூரப்பா பதவியேற்றும் விட்டார். அடுத்து மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் ஒரு வாரம் கெடு விதிக்க, 3 நாட்கள் போதும் என்று நாளை மறுநாளே நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் எடியூரப்பா தயாராகி விட்டார்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களால் ஆட்சி பறிபோன சோகத்தில் உள்ள குமாரசாமியை, உற்சாகப்படுத்துவதாக நினைத்து, அவரது கட்சி எம்.எல்.ஏக்களில் சிலர் புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். அதாவது, காங்கிரஸ் உறவை முறித்துக் கொண்டு எடியூரப்பாவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்பது தான் அந்த யோசனையாம். நேற்றிரவு நடந்த மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த யோசனையை கூறிய சில எம்எல்ஏக்கள், எடியூரப்பாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம் என்று கூறினராம். கூட்டத்தில் சில எம்எல்ஏக்கள் இந்த யோசனை கூறியதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.டி.தேவகவுடா, இறுதி முடிவு எடுப்பது குமாரசாமியின் கையில்தான் உள்ளது என்று கூறியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பாகி உள்ளது.

ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்படி மாறி,மாறி காங்கிரசையும், பாஜக வையும் ஆதரிப்பது கர்நாடக அரசியலில் ஒன்றும் புதிதல்ல.

ஏற்கனவே 2004 -ல் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்திருந்த குமாரசாமி, திடீரென பாஜகவுடன் கைகோர்த்தார். அப்போது ஆளுக்கு 20 மாதம் முதல்வர் பதவி என குமாரசாமி முதலில் முதல்வரானார். 20 மாதம் முடிந்தும் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க குமாரசாமி மறுக்க, பாஜக அவரை கவிழ்த்தது. ஒரு மாத ஆளுநர் ஆட்சிக்குப் பின் இரு கட்சிகளும் சமாதானமாகி எடியூரப்பா முதல்வரானார். ஆனால் ஏழே நாட்களில் எடியூரப்பாவை கவிழ்த்து விட்டார் குமாரசாமி . இதனால் பதவிக்காக, நண்பன் என்ன? பகைவன் என்ன? எல்லாம் ஒன்று தான் என்ற கொள்கையுடைய தேவகவுடாவின் குடும்பக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், எடியூப்பாவை வலியப் போய் ஆதரித்தாலும் ஆச்சர்யமில்லைதான்.

ஆனால் ஏற்கனவே குமாரசாமியால் சூடுபட்ட பூனையாக உள்ள எடியூரப்பா இம்முறை உஷாராகவே இருக்கிறார். எந்த மாநிலக் கட்சியின் ஆதரவையும் கோரப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளார்.

ஆனாலும் இன்னும் 2 நாட்கள் இடைவெளியில் கர்நாடக அரசியலில் என்ன வேணாலும் நடக்கலாம். ஏனெனில் அதிருப்தி எம்எல்ஏக்களில் இன்னும் 13 பேரின் கதி அந்தரத்தில் உள்ளது. ஒரு வேளை 13 பேரும் தகுதி நீக்கத்திற்கு பயந்தோ, பாஜக நப்பாசை காட்டியது போல் அமைச்சர் பதவி வழங்க மறுத்தாலோ மீண்டும் தங்கள் கட்சிக்கே திரும்பவும் வாய்ப்புள்ளதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடக சட்டசபையில் 29ல் நம்பிக்கை வாக்கெடுப்பு; எடியூரப்பா பேட்டி

More News >>