இவற்றை செய்தால் எப்போதும் ஆரோக்கியம்தான்!

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறோம்? புகை பிடிக்கமாட்டார், உடல் எடையை சரியானபடி பேணுவதற்கு முயற்சிக்கிறார், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிக்கவை என்று ஆரோக்கியமான உணவு பொருள்களை மட்டும் சாப்பிடுகிறார், ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார் - ஆரோக்கிய வாழ்வின் காரணிகளாக கூறப்படும் இவற்றின் அடிப்படையில்தான் ஆரோக்கியத்தை அளவிடுகிறோம்.

இதைத் தவிர, மனஅழுத்தத்தை சமாளிப்பது, இரவு ஆழ்ந்து உறங்குவது, அதிக நேரம் அசையாமல் ஓரிடத்திலேயே அமர்ந்திருப்பதை தவிர்ப்பது ஆகியவையும் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம்.

வாழும் முறைகளை சிறிது மாற்றுவதால் ஒரே நேரத்தில் உடல் நலம் முழுவதும் சரியாகிவிடாது. ஆனால், சிறிது சிறிதாக மாற்றங்களை செய்து அவற்றை தொடர்ந்து கடைபிடிக்கும்போது, கண்டிப்பாக உடல்நலத்தில் மாற்றம் தெரியும்.

டிவி, கம்ப்யூட்டருக்கு லீவ்:

வாரத்தில் ஒருமுறை வீட்டில் தொலைக்காட்சி மற்றும் கணினி ஆகியவற்றை அணைத்து வைத்துவிடுங்கள். அந்த நாள், குடும்பத்தினரோடு சேர்ந்து உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்யலாம். ஏதாவது விளையாடலாம்; நடந்து வரலாம். இப்படி உடலை அசைக்கும் பணிகளை செய்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

நடத்தல்:

நடப்பதற்கு எந்த அளவுக்கு முடியுமா அந்த அளவு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஏதாவது வேலை முடித்ததும், வீடு இருக்கும் தெருவை சுற்றி வரலாம். வளர்ப்பு நாயை கூட்டிக்கொண்டு சற்று தூரமாகவே நடந்து செல்லலாம். டிரட்மில் போன்ற கருவிகளை வீட்டில் வைத்திருப்பவர்கள் தினமும் தவறாது ஐந்து நிமிடமாவது பயன்படுத்தலாம்.

வீட்டு வேலைகள்:

வீட்டில் தோட்ட வேலை, வீட்டைச் சுற்றி கூட்டிப் பெருக்குதல், தரையை துடைத்தல் போன்ற வேலைகளை செய்யலாம். இது பெரிய அளவில் உடற்பயிற்சி போன்றவை இல்லையென்றாலும், சிறிதாவது உடலுழைப்பை அளிக்கும். வீடும் சுத்தமாகும்.

டூ இன் ஒன்:

மொபைல் போனில் பேச வேண்டிய சூழ்நிலை வருகிறது. சற்று நீண்ட உரையாடலாக இருக்கும் பட்சத்தில், பேசிக்கொண்டே உலவலாம். குப்பைகளை சுத்தம் செய்யலாம். இப்படி கிடைக்கும் வாய்ப்பை நடப்பதற்கும், ஒரே இடத்தில் அமராமல் நகர்வதற்கும் பயன்படுத்தவேண்டும்.

விழிப்புணர்வு

தினமும் நீங்கள் எவ்வளவு நேரம் அமர்ந்து வேலைகளை செய்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். அதிக நேரம் அமர்வதை தவிர்க்க, அந்த நேரத்தில் என்னென்ன வேலைகளை நடமாடி செய்யலாம் என்றும் பட்டியலிடுங்கள். அதை பழக்கப்படுத்தும்போது, உடலை அசைத்து வேலை செய்வது ஓர் ஒழுங்குக்கு வந்துவிடும்.

நடமாடுவதால் கிடைக்கும் பலன்கள்

இதயநோய், பக்கவாதம், மூளையில் இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படுதல், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை நடப்பதன் மூலம் தவிர்க்கலாம். மூட்டுகள் வலிமை பெறும். உடல் அதிகமாக நடமாடும் ஆற்றல் பெறும். முதுமையில் நெகிழும் தன்மை உடலுக்கு இருக்கும். எலும்பின் அடர்த்தி பாதுகாக்கப்படும். மனக்கலக்கம், மன சோர்வு போன்ற மனம் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும். நம்மேல் நமக்கே மதிப்பு, சுயமரியாதை அதிகமாகும். முதியவர்களானால் நினைவு திறன் கூர்மையாகும்.

உணவு:

நன்றாக நடமாடுவதோடுகூட, பழங்கள், காய்கறிகள் இவற்றை அதிக அளவில் உணவில் சேர்க்கவேண்டும். கொழுப்பு சத்து அதிகம் மிக்க உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவேண்டும்.

இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், நாளடைவில் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

More News >>