ஆடி அமாவாசை: சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள் வனத்துறை, அறநிலையத்துறை கெடுபிடியால் கடும் அவதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா துவங்கியதையொட்டி இன்று முதல் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமப்பட்டு மலையேறி சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், வனத்துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளின் குளறுபடிகளாலும், கெடுபிடிகளாலும் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாக நேர்ந்துள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்... மதுரை மாவட்டத்தின் தென்மேற்கு மூலையில், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழமையான சிவஸ்தலம். இங்கு சுயம்புலிங்கமாக சிவன் சுந்தரமகாலிங்கம் என்ற பெயரில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் சதுரகிரி என்ற போற்றியழைக்கப்படும் இந்த ஸ்தலத்தில் சித்தர்கள் பலர் வாழ்ந்ததாக புராணக் கதைகளும் உண்டு.
கோரக்கர் என்ற சித்தர் வாழ்ந்த குகையும் இங்கு பிரசித்தம். இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை கள் நடைபெறும். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா இங்கு பிரசித்தம்.தமிழகம் முழுவதும் இருந்த லட்சக்கணக்கானோர் இங்கு கூடுவது வழக்கம்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை என்ற இடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரம் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து சென்று தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும். செங்குத்தான மலைப் பகுதியில் 7 மலைகளை கடந்து கடும் சிரமத்தையும் பாராது பக்தர்கள் மலையேறுவது பல காலமாக நடந்து வருகிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் இங்கு மலையேறலாம் என்ற நிலை இருந்தது. முக்கியமாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். இரவிலும் கையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தட்டுத்தடுமாறி மலையேறுவதும் வழக்கமாக இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திடீர் மழையால் காட்டாற்று வெள்ளம் வர, பக்தர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். 6 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதன் பின்பு மலையேற கடும் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டது வனத்துறை .அமாவாசை மற்றும் பவுர்ணமியின் போது மட்டும் தலா 4 நாட்கள் மட்டுமே மலையேற முடியும். காலை 6 மணி மாலை 4 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி என்ற கட்டுப்ப்பாட்டை விதித்து விட்டது. கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடைகளுக்கும் ஏக கெடுபிடிகள் விதிக்கப்பட்டு விட்டது.
மேலும் ஆண்டு முழுவதும் இங்கு பக்தர்களுக்கு இலவசமாக உணவளித்து வந்த அன்னதான மடங்களையும் மூடுமாறு அறநிலையத் துறை உத்தரவிட்டுவிட்டது. அதே வேளையில் தனியார் ஓட்டலுக்கு அனுமதி கொடுக்க, ஒரு இட்லி 25 ரூபாய், தோசை 50 ரூபாய், 1 லிட்டர் குடிநீர் 50 ரூ என விற்று பக்தர்களை திண்டாட்டத்துக்கு ஆளாக்கிவிட்டனர் அறநிலையத் துறை அதிகாரிகள் .
அன்னதான மடத்தினரும், பூஜைப் பொருட்கள், பல காரங்கள் விற்கும் சிறுகடைகளின் வியாபாரிகளும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டும், அதிகாரிகள் பிடிவாதம் பிடித்ததால் மலையில் இப்போது பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டுள்ளது.
இந்நிலையில் தான் வரும் 30-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதல் பக்தர்கள் மலையேறத் தொடங்கி விட்டனர். ஆகஸ்ட் 1-ந் தேதி வரை 6 நாட்களுக்கு மலையேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விடும். ஆனால் லட்சக்கணக்கானோர் கூடும் இந்த ஆடி அமாவாசை விழாவுக்கும் வனத்துறையினரும், அறநிலையத் துறையினரும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பக்தர்களை அல்லாட வைத்துள்ளனர்.
போதிய மழை இல்லாததால் மலை உச்சியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கோயிலில் முடி காணிக்கை செலுத்த தடை விதித்து அடிவாரத்திலேயே மொட்டை அடித்து குளித்து விட்டே மலையேற வேண்டும். அன்னதானமும் அடிவாரத்திலேயே வழங்க வேண்டும். பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கும் தடை என ஏகப்பட்ட தடைகளைப் போட்டுள்ளனர்.
இதனால் மலை அடிவாரத்தில் ஏகப்பட்ட பொருட்கள் மலைபோல் தேங்கி வியாபாரிகள் பலர் கலக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். சிரமப்பட்டு மலையேறும் பக்தர்களுக்கு போதிய குடிநீர், உணவு,கழிப்பறை வசதிகளை செய்யாமல் அதிகாரிகளும் குளறுபடி செய்துள்ளதால், பக்தர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர். இதையெல்லாம் பொருட்படுத்தாது, ஆடி அமாவாசைக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.