17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பி்ல் எடியூரப்பா வெற்றி உறுதி
கர்நாடகாவில் 17 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெறுவது எளிதாகி விட்டது.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. காங்கிரசில் 13 எம்.எல்.ஏ.க்கள், ம.ஜ.த. கட்சியில் 3 எம்.எல்.ஏ.க்கள் என்று 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் நட்சத்திர ஓட்டலில் தங்கினர். அதே போல், ஆட்சிக்கு ஆதரவு அளித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் ஆகியோர் அதை வாபஸ் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 23ம் தேதி கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதன்பின்பு, பாஜக தலைவர் எடியூரப்பா, கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரும் எடியூரப்பா பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். நாளை(ஜூலை28) அவர், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.
காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜரிகோலி, மகேஷ் குமட்டஹல்லி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று, மேலும் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 224 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையின் பலம் தற்போது 207ஆக குறைந்துள்ளது. எனவே, மெஜாரிட்டிக்கு தேவை 104 எம்.எல்.ஏ.க்கள்தான். ஆனால், பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா எளிதில் வெற்றி பெறுவார்.
அதே சமயம், அமைச்சராகும் ஆசையில் பாஜகவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கொண்டு சென்ற ரமேஷ் ஜரிகோலி உள்ளிட்டோரால் அமைச்சராக முடியாது. காரணம், அவர்கள் இந்த சட்டசபையின் பதவிக்காலம் முடியும் வரை எம்.எல்.ஏ.வாக இருக்க முடியாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமாக தீர்ப்பு பெற்றால் மட்டுமே அவர்களால் அமைச்சர்களாக முடியும்.
அல்லது, கர்நாடகாவின் தற்போதைய சட்டப் பேரவை கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடந்தால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் போட்டியிடலாம்.