சட்டப்பிரிவு 35ஏ ரத்தானால் காஷ்மீரில் கடும் விளைவு மெகபூபா முப்தி எச்சரிக்கை

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை தரும் அரசியல் சட்டப்பிரிவு 35ஏ- ஐ தொட்டால், அந்த கைகள் மட்டுமல்ல. முழு உடலும் சாம்பலாகி விடும்’ என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் திடீரென ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கடந்த 2 நாள் முன்பாக கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அமர்நாத் யாத்திரை பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகத்தான் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், பாலகோட் தாக்குதல் போன்று தீவிரவாதிகள் முகாம்கள் மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்று பேசப்பட்டது.

மேலும், அரசியல் சட்டப்பிரிவு 35ஏ- ஐ ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு அதிரடி முடிவெடுக்கப் போவதாகவும், அதற்காக முன்னெச்சரிக்கையாக படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டது. அரசியல் சட்டப்பிரிவு 370ல் ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 35ஏ-ல் காஷ்மீரிகளைத் தவிர வெளியாட்கள் யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது. நிரந்தரக் குடியுரிமை குறித்த அம்மாநில சட்டசபைதான் தீர்மானிக்க முடியும்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன நாள் விழாவில் அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘காஷ்மீருக்கு சலுகை அளிக்கும் 35ஏ பிரிவை யாராவது தொட்டால், அந்த கைகள் மட்டுமல்ல, உடல் முழுவதுமே சாம்பலாகி விடும். அந்தப் பிரிவை மத்திய அரசு நீக்கினால், அது காஷ்மீரில் வெடிகுண்டுகளை வீசுவது போல் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். மக்களிடம் தற்போது ஒரு அச்ச உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எதுவும் நடக்கலாம். மக்கள் கவலைப்பட வேண்டாம். காஷ்மீர் என்ற அடையாளம் இருக்கும் வரை, மக்கள் ஜனநாயக கட்சி போராடும். நான் ஊழல் செய்திருந்தால்தான் என்னை அவர்கள் சிறைக்கு அனுப்ப முடியும். நான் ஊழல் செய்யவில்லை. என்னிடம் பணம் இல்லை. அதனால், எனக்கு பயமில்லை’’ என்றார்.

More News >>