கார் மீது டிரக் மோதல் உ.பி. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணை கொல்ல முயற்சி?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த இளம் பெண்ணை கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.மாநிலம் பங்கெர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறி, உன்னாவ் பகுதியைச் இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். வேலை கேட்டு சென்ற போது எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லம் அருகே அந்த இளம்பெண் தீக்குளிக்க முயற்சித்தார்.

அப்போது, மகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணின் தந்தையை, பாஜக எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கினர்.இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளம்பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் உயிரிழந்தார். பாஜக எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்குதலில் படுகாயமடைந்ததாலேயே, இளம்பெண்ணின் தந்தை உயிரிழந்தார் என்று கூறி பெரும் போராட்டமே நடைபெற்றது. மேலும் பாஜக எம்எல்ஏ மீது இளம்பெண் பாலியல் புகார் கூறியதும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று அப்பெண் தனது தாய், வழக்கறிஞர் மற்றும் ஒரு உறவினருடன் காரில் ரேபரேலி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது டிரக் ஒன்று மோதியது. இந்த விபத்தில் அந்த இளம் பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் இளம் பெண்ணும் அவரின் வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

ஏற்கெனவே அப்பெண்ணின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு சிறையிலிருக்கும் போது உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது நடந்த இந்த விபத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்டு, பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணை கொல்ல நடந்த முயற்சி என்றும் கூறப்படுகிறது. கார் மீது மோதிய சம்ந்தப்பட்ட டிரக்கில் நம்பர் பிளேட்டும் இல்லாதது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதனால் உ.பி.யில் இந்த விபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் கணக்கு முடக்கப்படாமல் பயன்படுத்துவது எப்படி?

More News >>