தமிழகத்தில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுமா ? மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: தமிழகத்தில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று தொழில்நுட்ப துறை மாநாடு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மாநாட்டில் டிஜிட்டல் இந்தியா பற்றியும், ஆதார் கார்டு பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்கள் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டில் உள்ள ‘சி.எஸ்.சி. சென்டர், டேட்டா சென்டர், ரெக்கவரி சென்டர்களுக்கு’ மின்னணு நிர்வாகம் மூலம் வரவேண்டிய நிதி நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த நிதியை உடனே தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் ‘எலக்ட்ரானிக் கிளஸ்டர்’ உருவாக்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளோம். தமிழகத்தில் இருந்த நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அதில் உள்ள பிரச்னைகளை மத்திய அரசு சரி செய்தால் மீண்டும் திறக்கலாம் என்று கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து, பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் கூறினார். எனவே மீண்டும் திறக்கப்படும்.

மாநாட்டில் எனது கோரிக்கையை ஏற்று சென்னைக்கு ‘பின்டெக்ஸ்’ என்கிற தகவல் தொழில்நுட்ப சிறப்பு மையம் தந்து இருக்கிறார்கள்.‘சைபர்’ குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கை பற்றி மாநாட்டில் கேட்டோம். அதற்கு கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெக்கவரி டீம் மூலம் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 14 துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. எல்லா துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More News >>