கர்நாடக சபாநாயகர் பதவி: ராஜினாமா செய்கிறார் ரமேஷ்குமார்

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் மீது பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

கர்நாடகா அரசியலில் ஏறத்தாழ 20 நாட்களுக்கும் மேலாக குழப்பம் மேல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்எல்ஏக்களால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதும் உறுதியாகிவிட்டது.

கர்நாடகத்தில் இத்தனை நாளும் நடந்த அரசியல் குழப்பத்தில், சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகா அதில் உச்ச நீதிமன்ற உத்தரவு, குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில ஆளுநர் விதித்த கெடு என எதற்கும் சபாநாயகர் பணிந்து போகவில்லை. அரசியல் சாசனச் சட்டத்தில் தனக்குள்ள அதிகாரங்களை சுட்டிக்காட்டி, கடைசியில் அதனை நிரூபித்தும் காட்டி விட்டார்.

கட்சி மாறும் எம்எல்ஏக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என, 17 பேரின் பதவியைப் பறித்ததுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்க முடியாத அளவுக்கு கொடுத்த தண்டனை நாடு முழுவதுமே பெரும் பாராட்டை பெற்றுள்ளது என்றே கூறலாம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரானாலும், தான் சார்ந்த கட்சியின் ஆட்சி பறிபோகும் போது கூட, ஓரளவுக்கு நடுநிலையுடன் அவர் செயல்பட்டார் என்றே கூறலாம். சபாநாயகரின் அதிகாரத்தை நிலைநாட்டுவேன் என்று கூறி, பணம், பதவிக்காக அல்லாடும் அரசியல்வாதிகளை மனிதர்களே அல்ல என்று அவர் முன் வைத்த விமர்சனமும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, ரமேஷ்குமாரை சபாநாயகர் பதவியில் நீடிக்க விடப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி தான். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே, சபாநாயகர் ரமேஷ்குமாரை காலி செய்ய பாஜக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. ஆனால் ரமேஷ்குமாரோ அது வரை காத்திருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. கெத்தாக முன்கூட்டியே சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரிசையில் அமர முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்றோ, நாளையோ சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடி ஒரு நீண்ட உரை நிகழ்த்தி விட்டு பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்; நம்பிக்கை வாக்கெடுப்பி்ல் எடியூரப்பா வெற்றி உறுதி

More News >>