டெல்லி உள்பட 13 இடங்களில் வருமான வரித் துறை ரெய்டு அரசியல் புள்ளிகள் சிக்குகின்றனர்
டெல்லி உள்பட 13 இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புடைய ‘குரூப்’ நிறுவனத்தின் 200 கோடி கறுப்பு பணச் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்தில் 13 இடங்களில் நேற்று(ஜூலை28) வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புடைய ஒரு ‘குரூப்’ நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கறுப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டாமல் ரூ.200 கோடிக்கு வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளும், ரூ.30 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக கணக்கில் காட்டப்படாமல் சேர்க்கப்பட்ட வருமானத்தில் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு சொர்க்கமாக விளங்கும் வெளிநாடுகளின் டிரஸ்ட்கள் மற்றும் கம்பெனிகள் பெயரில் அந்த கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பனாமா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வருமான வரித் துறை சட்டம் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர்களின் சொத்துக்களை பாருங்க... மாயாவதி கடும் கோபம்