கர்நாடகா : நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அமோக வெற்றி
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார். குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்களால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த வாரம் கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, கூடுதல் எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வைத்திருந்த பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.ஆளுநர் வஜுபாய் படேலும் அதனை ஏற்று அழைப்பு விட்டதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.
சட்டப்பேரவையில் ஒரு வாரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் நிதி மசோதாவை இம்மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதால், 29 - ந் தேதியே (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என எடியூரப்பா அறிவித்திருந்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், 14 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மட்டுமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. இதனால் அவர்கள் திங்கட்கிழமை வாக்கெடுப்பில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களில 14 பேரையும் நேற்று சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா எளிதாக வெற்றி பெற வழி ஏற்பட்டுவிட்டது.சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் சட்டப்பேரவையில் பலம் 207 ஆக குறைந்தது .இதனால் பெரும்பான்மைக்கு 104 பேர் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், பாஜகவில் மட்டும் 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் எடியூரப்பா வெற்றி பெறுவது உறுதி என அனைவருக்கும் தெரிந்தது.
இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் எடியூரப்பா கொண்டு வந்து பேசினார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு முதலில் நன்றி தெரிவித்த எடியூரப்பா, விவசாயிகளின் நண்பனான தாம், விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன் என்றார். கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமய்யா பேசினார். அதிகம் விவாதிக்க விரும்பவில்லை என்ற சித்தராமய்யா, தம்முடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை குமாரசாமி அரசும் தொடர்ந்தது. குமாரசாமி அரசும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியது.அத்திட்டங்களை எடியூரப்பா அரசும் தொடர வேண்டும் என சித்தராமய்யா வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து முதல்வர் பதவி இழந்த குமாரசாமியும் பேசினார்.
பின்னர் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, எடியூரப்பா கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகரின் அவசர முடிவுக்கு காரணம் இதுதான்