14 கிலோ தங்க நகையுடன் யாத்திரை செல்லும் சாமியார்

கோல்டன் பாபா என்று அழைக்கப்படும் சுதிர் மக்கார் சாமியார், 14 கிலோ தங்கச் சங்கிலிகளை அணிந்து தனது 26வது கன்வார் யாத்திரையை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிரபல ரவுடிகள் பலரும் கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளையும், கைகளில் பிரேஸ்லெட், மோதிரங்களையும் அணிந்து வலம் வருவார்கள். சமீபத்தில் கூட அத்திவரதரை தரிசிக்க வந்த முன்னாள் தாதா ஒருவரை கழுத்து நிறைய தங்கத்துடன் பார்த்திருப்பீர்கள்.

இதே போல், வடநாட்டில் ஒரு சாமியார் தங்க நகைகளுடன் உலா வருகிறார். அவரது பெயர் சுதிர் மக்கார் என்றாலும் அவரை ‘கோல்டன் பாபா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

வடமாநிலங்களில் சிவபக்தர்கள், ‘கன்வார் யாத்ரா’ என்ற பெயரில் ஹரித்துவார், கங்கோத்ரி போன்ற புனிதத் தலங்களுக்கு செல்வார்கள். கோல்டன் பாபாவும் ஆண்டுதோறும் கன்வார் யாத்திரை செல்கிறார். அவர் செல்லும் போது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்து ெகாள்வார். கைகளிலும் பெரிய தங்கக் காப்புகளை அணிந்திருப்பார். இந்த ஆண்டும் அவர் தனது யாத்திரையை தொடங்கியிருக்கிறார். நேற்று காசியாபாத் வந்த அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

ஏற்கனவே அவரே தனக்கு சில பாதுகாவலர்களை வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு 20 கிலோவுக்கு தங்கச் சங்கிலிகளை அணிந்து சென்ற கோல்டன் பாபா, இந்த முறை அதை 14 கிலோவாக குறைத்து விட்டார்.

இது பற்றி கேட்ட போது அவர், ‘‘எனக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால், கொஞ்சம் சங்கிலிகளை குறைத்து கொண்டேன். கடந்த ஆண்டு எனது வெள்ளிவிழா ஆண்டு யாத்திரையை சிறப்பாக முடித்தேன். இப்போது 26ம் ஆண்டு யாத்திரையை சிவபெருமான் ஆசியுடன் தொடங்கியுள்ளேன்’’ என்றார்.கோல்டன் பாபா யாத்திரையில் ஆடம்பரக் கார்களும் பவனி வருகின்றன. அவரது வருகையின் போது உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக காசியாபாத் எஸ்.பி. ஸ்லோக் குமார் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் மிகப் பெரிய ஜவுளி வியாபாரியாக திகழ்ந்த சுதிர் மக்கார் தனது வியாபாரத்தை விட்டுவிட்டு, சொத்துக்களை வாடகைக்கு விட்டார். அதன்பிறகு, சாமியாராகி இப்படி கோல்டன் பாபாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அத்திவரதர் தரிசனம் ; கூடுதல் வசதிகள், சிறப்பு அதிகாரிகள் நியமனம்" - தலைமை செயலாளர் தகவல்

More News >>