ரமாதேவி குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்டார் ஆசம்கான்

மக்களவையில் பாஜக பெண் உறுப்பினர் ரமாதேவி குறித்து ஆட்சேபகரமான வார்த்தைகளை பேசிய சமாஜ்வாடி உறுப்பினர் ஆசம்கான் மன்னிப்பு கேட்டார்.

மக்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது, மாற்று சபாநாயகராக பீகாரைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பேசிய ஆசம்கான், தனிப்பட்ட முறையில் ரமாதேவியை வர்ணணை செய்தார். பெண் உறுப்பினர் குறித்து இப்படி ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தியது தவறு என்று பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் பலரும் பேசினர். ஆசம்கான் தொடர்ந்து இப்படித்தான் பேசுகிறார் என்றும் அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆசம்கான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆசம்கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆசம்கான், திங்கட்கிழமை மக்களவை கூடியதும் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஆசம்கான், அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவரது பேச்சுக்கு விளக்கம் அளித்தனர். ஆனால், அதை ஏற்காத சபாநாயகர், ஆசம்கான், மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை உறுதிபட கூறினார்.

இதைத் தொடர்ந்து மக்களவை இன்று காலை கூடியதும், ஆசம் கான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நான் 9 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளேன். பல முறை அமைச்சர் பதவி வகித்திருக்கிறேன். ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகவே இருந்துள்ளேன். எனவே, எனக்கு நாடாளுமன்ற விதிகள் தெரியும். ஆனாலும், நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ரமாதேவி எனது சகோதரி. அவரை நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை’’ என்றார்.

கிரண்பேடி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு அனுமதி மறுப்பு

More News >>