அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை எட்டியது
அத்திவரதர் 29வது நாளாக இன்று ஆரஞ்சு நிற பட்டாடை உடுத்தி, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். அத்திவரதரை இது வரை 42 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அந்த கோயிலின் குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம் அளித்து வருகிறார்.
இந்த முறை வழக்கமான மீடியாக்கள் தவிர, சமூக ஊடகங்களிலும் அத்திவரதர் சிறப்பு மற்றும் பெருவிழா குறித்த செய்திகள் உடனுக்குடன் வெளியாகி வருகின்றன. இதனால், அத்திவரதரை தரிசிக்க தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சனி, ஞாயிறு என்ற கடந்த 2 விடுமுறை நாட்களில் மட்டும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். இதுவரை பொது தரிசனத்துக்காக 3 வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிழக்கு கோபுர வாயில் வழியாக 5 வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுவரை சுமார் 42 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடை உடுத்தி, மல்லிகை, முல்லை, செண்பகப்பூ என்று பல வண்ண மலர் அலங்காரத்துடன் காட்சி அளித்து வருகிறார். காலை முதல் மதியம் வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரித்துள்ளனர்.
இன்றும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால், இரவு வரை தரிசனம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திவரதரை தரிசித்த 35 லட்சம் பக்தர்கள்; சாம்பல் பச்சைப் பட்டில் காட்சி