நெல்லை முன்னாள் மேயரை கொல்ல பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே?- தாமிரபரணி ஆற்றில் வலைவீசி தேடும் போலீஸ்
நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்ததையடுத்து தாமிரபரணி ஆற்றில் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்த உமாமகேஸ்வரியும், அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு வேலை பார்த்த பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் கடந்த 23-ந் தேதி படுகொலை செய்யப்பட்டனர். நெல்லை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள வீட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை நடந்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வராததால் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.. சொத்துக்காக கொலை நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் உமாமகேஸ்வரியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நகை, பணமும் கொள்ளை போயிருந்ததால் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தியும் ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறிவந்தனர்.
இந்நிலையில் தான், முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனால் நெல்லையைச் சேர்ந்த திமுக மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினரான சீனியம்மாளிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரையில் மகள் வீட்டில் தங்கியிருந்த சீனியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 1996-ல் நெல்லை மாநகராட்சியாக்கப்பட்டு, மேயர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் பதவியைப் பிடிக்க, அப்போது நெல்லை மாவட்ட திமுகவில் பொறுப்பில் இருந்த உமா மகேஸ்வரிக்கும், சீனியம்மாளுக்கும் இடையே கடும் போட்டி இருந்துள்ளது. அப்போது, திமுக மேலிடச் செல்வாக்கால் உமாமகேஸ்வரி மேயர் பதவியைக் கைப்பற்றி விட்டார். இதனால் அது முதலே இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது சங்கரன்கோவில் தொகுதியில் சீட் வாங்கித் தருவதாக சீனியம்மாளிடம், உமா மகேஸ்வரி ஒரு பெரும் தொகையை வாங்கியிருந்தாராம். ஆனால் சீட்டும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் உமாமகேஸ்வரி இழுத்தடித்ததால் இருவரிடையே பகையாக மாறியுள்ளது. இதனால் சீனியம்மாள் கூலிப்படையை ஏவி, உமா மகேஸ்வரியையும் மற்ற இருவரையும் கொலை செய்து, நகை பணத்துக்காக கொலை நடந்தது போல் நாடகமாடியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தினர்.
ஆனால், தமக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொலை வழக்கில் தன்னை சிக்கவைக்க முயற்சி நடப்பதாக சீனியம்மாள் குற்றம்சாட்டியிருந்தாலும், போலீசார் சந்தேகக் கண்ணுடனேயே சீனியம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தார், நண்பர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், உமாமகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர்.
உமா மகேஸ்வரியின் வீடு அருகே உள்ள உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது ஸ்கார்பியோ கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்ததை போலீசார் கண்டறிந்தனர்.மேலும், கொலை நடந்த நாளில் அப்பகுதியில் உபயோகத்தில் இருந்த செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், ஸ்கார்பியோ காரில் இருந்த நபர் ஒருவரின் செல்போன் எண் தான் அப்பகுதியில் அதிக நேரம் பயன்பாட்டில் இருந்தது என்பதை போலீசார் உறுதி செய்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் வசமாக சிக்கினார். கார்த்திகேயன் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகளும் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, கார்த்திகேயனையும் மற்றும் 2 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து கொலையை செய்தது தாங்கள் தான் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கார்பியோ காரில் சென்று உமாமகேஸ்வரியை கொலை செய்ததாகவும், துப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அப்போது வீட்டில் இருந்த அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப் பெண் மாரியம்மாளையும் தீர்த்துக் கட்டியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்த போது தங்கள் உடைகளிலும் ரத்தக்கறை படிந்திருந்ததால், காரிலேயே மணிமுத்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்ததாகவும், ஆயுதங்களையும் ஆற்றிலேயே வீசி விட்டு தப்பியதாகவும் கூறியுள்ளனர். இதனால் மணிமுத்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றில் ஆயுதங்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன் விரோதத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் . முருகசங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரையும் கொலை செய்த வழக்கில் திமுக பெண் நிர்வாகி சீனியம்மாளின் மகனே சம்பந்தப்பட்டிருப்பது, திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 3 பேர் பிடிபட்டிருக்கும் நிலையில் இந்தக் கொலை வழக்கில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நெல்லை மேயர் உமா மகேஸ்வரி கொலையில் தொடர்பா? - திமுக மாநில பெண் நிர்வாகி மறுப்பு