எம்.பி.க்களின் மைக்குகளில் திடீர் புகை - ராஜ்யசபாவில் திடீர் பரபரப்பு சபையும் ஒத்திவைப்பு
ராஜ்யசபாவில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்.பி.க்கள் முன் இருந்த மைக்குகளில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ராஜ்ய சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் ரகளை, அமளி, கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டால் ஒத்தி வைக்கப்படுவது வழக்கமாக நடைபெறுவதுண்டு. ஆனால் இன்று வித்தியாசமான ஒரு காரணத்துக்காக சபை ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது .
இன்று காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியவுடன், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் இந்தோனேசியாவில் நடைபெறும் குத்துச் சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சபையை ராஜ்யசபாத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, பாஜக எம்பிக்கள் சிவ் பிரதாப் சுக்லா மற்றும் புருஷோத்தம் ரூபலா மற்றும் அல்போன்ஸ் ஆகியோர் முன் இருந்த மைக்குகளில் திடீரென புகை வருவதை அறிந்து அந்த இடத்தை விட்டு அகன்றனர். ராஜ்ய சபாத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதனால் ராஜ்யசபாவில் மற்ற எம்.பி.க்கள் இடையேயும் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சபைக் காவலர்களை அழைத்த ராஜ்ய சபாத் தலைவர் வெங்கய்ய நாயுடு, என்ன கோளாறு என்று பார்க்குமாறு உத்தரவிட்டு, சபை நிகழ்ச்சிகளையும் 15 நிமிடம் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் ராஜ்யசபா வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
காஷ்மீரில் ராணுவம் குவிப்பு வீடு, வீடாக என்.ஐ.ஏ. சோதனை; தீவிரவாதிகள் மீது தாக்க திட்டம்?