நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர், பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை முன்னாள் மேயரான உமா மகேஸ்வரியும் அவருடைய கணவர் முருக சங்கரன், வீட்டு வேலை பார்த்த மாரியம்மாள் ஆகிய 3 பேரும் கடந்த 23-ந் தேதி படுகொலை செய்யப்பட்டனர். நெல்லை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள உமாமகேஸ்வரிக்கு சொந்தமான பங்களா வீட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த படுகொலை சம்பவம் குறித்து நெல்லை மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நெல்லை போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். கடைசியில், முன் விரோதத்தில் திமுக மாநில நிர்வாகப் பொறுப்பில் உள்ள சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பவர் இந்தக் கொலையில் தொடர்புடையது அம்பலமானது.
கார்த்திகேயனையும் மேலும் 2 பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொலை செய்ததை கார்த்திகேயன் ஒப்புக் கொண்டதாகவும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்ற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.