பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணை கொல்ல முயற்சி பாஜக எம்எல்ஏ மீது கொலை வழக்கு
உ.பி.யில் பாஜக எம்எல்ஏ ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் மீது டிரக் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருடன் காரில் சென்ற இளம் பெண்ணை டிரக்கை மோதச் செய்ததில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ உள்பட 9 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உ.பி. மாநிலம் உன்னோவில் 16 வயது சிறுமியாக இருந்த சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது புகார் எழுந்தது. புகாரை போலீசார் விசாரிக்க மறுப்பதாகக் கூறி கடந்தாண்டு அந்தப் பெண், தனது தந்தையுடன் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாந் வீட்டின் முன் போராட்டம் நடத்தினார்.
அப்போது தீக்குளிக்கவும் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது பாஜக எம்எல்ஏ வின் ஆட்கள் தாக்கியதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை காயமடைந்தார். காயமடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென இறந்து விட்டார்.
இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கும் உ.பி.அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண் தனது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலி அருகே கார் மீது டிரக் ஒன்று மோதியதில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் 2 பேர் மற்றும் படுகாயமடைந்த வழக்கறிஞரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் இளம்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். சிக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் கார் மீது டிரக் மோதிய சம்பவம் விபத்து அல்ல.சம்பந்தப்பட்ட பெண்ணை கொலை செய்ய பாஜக எம்எல்ஏ வின் ஆட்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்டிய பெண்ணின் தாய் கூறுகையில், பாலியல் பலாத்கார குற்றவாளியான பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார் இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ளார். தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி வருகிறார். சிறையில் இருந்து கொண்டே எல்லாவற்றையும் குல்தீப் சிங் செங்கார் இயக்குகிறார்.
கார் விபத்து எதார்த்தமாக நடந்தது இல்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. எங்களுடைய குடும்பத்தையே அழிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கார் மீது டிரக் மோதிய சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது. உ.பி.யில் உள்ள எதிர்க்கட்சிகளும் இதையே வலியுறுத்தின.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்எலஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய சகோதரர் உட்பட 9 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் தயாராக உள்ளதாக உ.பி.மாநில அரசு தெரிவித்துள்ளது.