ஒரு லட்சம் கோடி சுவாகா? சிதம்பரம் மீது சாமி புகார்

தேசிய வீட்டுவசதி வங்கியில் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் பெற்று மோசடி செய்த கம்பெனிகளுடன் ப.சிதம்பரம், ஹூடா உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது என்று சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊழல்கள் குறித்து அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை கிளப்பி வருகிறார். மோடி அமைச்சரவையில் கடந்த முறை நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லி, இப்போதுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரையும் அவர் விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் பிரதமருக்கு சமீபத்தில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் குரூப், பல லட்டர்பேடு கம்பெனிகளை ஆரம்பித்து, தேசிய வீட்டு வசதி வங்கியிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனாக பெற்று மோசடி செய்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த இந்த ஊழலில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.ஹூடா ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. எனவே, இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு சாமி கூறியுள்ளார்.

சாமியின் இந்த புகார் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதும், பங்குச் சந்தையில் இந்தியா புல்ஸ் குரூப் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால், அந்த பங்குகளை வைத்திருந்தவர்கள், சமூக ஊடகங்களில் சாமியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் ஐபேடில் பட்ஜெட் தாக்கல்; ப.சிதம்பரம் கிண்டல்

More News >>