மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா அதிமுக புறக்கணிக்க முடிவு
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதா, இன்று மாநிலங்களவையில் எடுத்து கொள்ளப்படுகிறது. அந்த அவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை.
அதே சமயம், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் அந்த மசோதாவை எதிர்க்காமல், வாக்கெடுப்பை புறக்கணிக்கலாம் என தெரிகிறது. எனவே, மசோதா நிறைவேறுமா என்று எதிர்க்கட்சிகளிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த கணவன்மார்கள், தலாக் என்று வார்த்தையை மூன்று முறை உச்சரித்து, மனைவியை விவாகரத்து செய்யலாம். இதற்கு அவர்களின் மதச் சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால், இப்படி செய்வதால் முஸ்லீம் பெண்கள் பலரும் ஆதரவற்றவர்களாகி விடுகிறார்கள் என்று கூறி, முத்தலாக் தடைச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது.
முஸ்லீம் பெண்கள்(திருமணப் பாதுகாப்பு) சட்ட மசோதாவை கடந்த நாடாளுமன்றத்திலேயே மக்களவையில் நிறைவேற்றினர். அப்போது அதிமுக சார்பில் அன்வர்ராஜா எம்.பி. கடுமையாக எதிர்த்து பேசினார். இதன்பின், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை கொண்டிருந்த அதிமுக, அங்கும் மசோதாவை எதிர்ப்பதாக கூறியது. அந்த அவையில் ஏற்கனவே பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. மேலும், தேர்தல் நேரத்தில் முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்பதால், டி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அந்த மசோதாவை எதிர்க்க வாய்ப்பிருந்தது. இதனால், மசோதாவை வாக்கெடுப்புக்கு விடாமல், அவையை ஒத்தி வைத்து விட்டார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
இதன் பின்னர், புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், மீண்டும் மக்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த முறை அதிமுகவுக்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திர குமார் மட்டுமே ஒரே எம்.பி.யாக மக்களவையில் உள்ளார். அவர் இந்தமுறை முத்தலாக் தடை சட்ட மசோதாவை வரவேற்று, ஆதரித்து பேசி விட்டார். இது அந்த கட்சிக்குள் குழப்பத்ைத ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், அவர் பேசியது அதிமுக கருத்தல்ல, மாநிலங்களவையில் அதிமுக கருத்தை பிரதிபலிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. இதை நிறைவேற்ற விடக்கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கியஜனதா தளம் கட்சியே முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார்கள் என்று காங்கிரஸ் பதற்றத்துடன் இருக்கிறது.
இந்நிலையில், அதிமுக, டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மசோதாவை எதிர்த்து பேசி விட்டு, வாக்கெடுப்பை புறக்கணித்து வெளியேறி விடும் என்று கூறப்படுகிறது. அப்போது அவையின் பலம் குறைந்து விடும். அதனால், பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று பாஜக நினைக்கிறது.
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் உறுப்பினர்கள் கட்டாயம் அவைக்கு வர வேண்டுமென்று கொறடா உத்தரவு (விப்) பிறப்பித்துள்ளன.
எடியூரப்பா அரசுக்கு மஜத ஆதரவா? - இல்லவே இல்லை என்கிறார் குமாரசாமி