ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்கப் பார்க்கிறது..? ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு புகார்

ஜெயலலிதா மரண விவகாரத்தில், விசாரணைக்கு தடை கோருவதன் மூலம் அப்போலோ நிர்வாகம் எதையோ மறைக்கப் பார்க்கிறது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்தன. இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என இப்போது துணை முதல்வராக உள்ள ஓபிஎஸ், தர்மயுத்தம் நடத்திய காலத்தில் குரல் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை 2017-ம் ஆண்டு தமிழக அரசு நியமித்தது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அப்பல்லோ நிர்வாகத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை ஆறுமுகசாமி ஆணையம் கொடுக்க ஆரம்பித்தது. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, அப்பல்லோ நிர்வாகத்தின் மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது என ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆணையம் சரியான முறையில் தான் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்பதால் விசாரணைக்கு தடை கோருகின்றனர். எனவே ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்கப் பார்க்கிறது என ஆறுமுகசாமி ஆணையம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது?- தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

More News >>