சயன கோலத்தில் அத்திவரதர் நாளை மதியம் வரை தரிசனம் ஆக.1 முதல் நின்ற கோலத்தில் காட்சி

அத்திவரதர் நாைள மறுநாள் முதல் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நாளை மதியம் 12 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அந்த கோயிலின் குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம் அளித்து வருகிறார்.

அத்திவரதரை தரிசிக்க தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதுவரை சுமார் 42 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 30வது நாளான இன்று அத்திவரதர் நீல நிற பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மலர் அலங்காரத்துடன் காட்சி அளித்து வருகிறார். காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளதால், நாளை(ஜூலை31) மதியம் 12 மணிக்கு மேல் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படுகிறது. மீண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி அதிகாலை 5 மணி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். அதே போல், ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால், அன்று மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்திவரதரை தரிசிக்க 31ல் வருகிறார் மோடி

More News >>