எங்களை கவிழ்க்க நினைத்தால் திமுகவை இரண்டாக்கி விடுவோம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சீண்டல்
அதிமுக அரசை கவிழ்க்கப் பார்த்தால் திமுகவையே 2 ஆக உடைத்து விடுவோம் என்றும், இதனால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என பூச்சாண்டி காட்டவேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சீண்டியுள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் 5-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக இடையே பிரச்சாரத்தில் வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. 3 நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக விமர்சித்து, பிரச்சாரத்தில் சூடு கிளப்பினர்.
இதற்கிடையே பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது வழக்கமான முரட்டு பாணியில் மு.க.ஸ்டாலினை சீண்டலாக விமர்சித்து வருகிறார். கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது போல், அதே பாணியில் தமிழகத்திலும் அதிமுக ஆட்சி விரைவில் கவிழும் என்று மு.க, ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக, நாங்கள் ஒன்றும் குமாரசாமி போல் ஏமாளிகள் அல்ல.. மோசமானவங்க.. கை வைச்சா அப்புறம் தெரியும் சங்கதி என்று ராஜேந்திர பாலாஜி மிரட்டலாக சீண்டியிருந்தார்.வேலூர் பிரச்சாரத்தில் அவர் இதே போன்றே தொடர்ந்து பேசி வருகிறார்.
வேலூரில் இன்று பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்த ராஜேந்திர பாலாஜி, ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், இந்த ஆட்சி, ஜெயலலிதா உயிரைக் கொடுத்து உருவாக்கிய ஆட்சி. குறுநில மன்னராகத் திகழும் ஸ்டாலின் போன்றவர்கள், இந்த ஆட்சியை அகற்ற முயல்கின்றனர். அப்படி நடந்தால், புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி, அதிமுக தொண்டர்கள் 1 லட்சம் பேர் திரளுவர். திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் பேரவைக்குள் செல்ல முடியாது. ஒருவேளை உள்ளே வந்து, எங்களிடம் பிரச்சினை செய்துவிட்டு வெளியேற முடியாது. அப்படி ஒரு நிலைமை, ஸ்டாலினுக்கும் உருவாகும்.
திமுக ஆட்சியைப் பிடிக்கும் கனவெல்லாம் இங்கே நடக்காது. அந்தப் பூச்சாண்டியை எல்லாம் ஸ்டாலின் காட்ட வேண்டாம். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்ததே? உள்ளே சென்றால் அத்தனையும் செய்துவிடுவோம் என்றார்களே? அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டியதுதானே?தீர்மானத்தை ஆதரித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எத்தனை பேர் ஓட்டு போடுவர் என்று பார்ப்போம்.
ஸ்டாலின் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுடன் போனில் பேசியிருக்கிறார். எங்களிடம் எத்தனை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியுள்ளனர் தெரியுமா?நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரட்டும். திமுக ஒன்று, இரண்டாகி விடும். கட்சியை இரண்டாக உடைத்து விடுவோம். அங்கிருந்து ஒரு குழு வெளியேற உள்ளது. ஸ்டாலின் தலைமை திமுகவில் யாருக்குமே பிடிக்கவில்லை என்றெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படபடவென தனது பாணியில் மு.க.ஸ்டாலினை சீண்டியுள்ளார்.
கமலஹாசனை நாக்கை வெட்டுவேன் என்றும், தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக இருந்த அறந்தாங்கி ரத்தின சபாபதியை கையை வெட்டுவேன் என்றும் முகத்தை உர்... ரென்று வைத்துக் கொண்டு மிரட்டல் தொனியில் சவடால் விடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்போது மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து சீண்டி வருவது பகீரைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்; அதிமுகவை உடைக்க பாஜக திட்டமா?