சட்டக்கல்லூரி மாணவரை கம்பி, செங்கலால் அடித்துக் கொன்ற சம்பவம் - டிக்கெட் பரிசோதகர் கைது
அலகாபாத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக டிக்கெட் பரிசோதகரை கைது செய்துள்ள காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் திலீப் சரோஜ், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று ஒரு உணவு விடுதியின் முன்பாக சில இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்டார்.
இரண்டு இளைஞர்கள் சரோஜை ஹாக்கி மட்டையாலும், இருப்பு கம்பி மற்றும் செங்கற்களாலும் தாக்கும் வீடியோ அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. பின்னர், இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பலத்த காயமடைந்த சரோஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை கண்டித்து அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் அரசு பேருந்துக்கு தீ வைத்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சரோஜின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே இது தொடர்பாக 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ரயில்வே டிக்கெட் பரிசோதகர் விஜய் சங்கர் சிங் என்பவரை அங்குள்ள விடுதி ஒன்றில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.