வெறுப்புணர்வு குற்றங்களுக்கு தூக்கு, ஆயுள் தண்டனை ராஜஸ்தானில் புதிய சட்டம்
ராஜஸ்தானில் வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, கவுரக் கொலை புரிவோருக்கு மரண தண்டனையும், வெறுப்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகளும், பல்வேறு பிரபலங்களும் சுட்டிக்காட்டி வரும் நிலையில், ராஜஸ்தானில் இந்த குற்றங்களை தடுப்பதற்காக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையில், ‘வெறுப்புணர்வு குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம்’ என்ற அந்த புதியச் சட்டத்திற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, சாதி மாறி கலப்பு திருமணம் செய்வோரை தாக்கும் குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது. அதாவது, காதல் கலப்பு திருமணம் செய்தவர்களை கவுரவக் கொலை புரியும் பெற்றோர் அல்லது எந்த குற்றவாளிக்கும் மரண தண்டனை விதிக்கப்படும். சாதி மாறி திருமணம் செய்தவர்களை தாக்கி, காயப்படுத்தினால் 5 லட்சம் ரூபாய் அபராதமும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்படும்.
இதே போல், வெறுப்புணர்வு குற்றங்களுக்கு குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதமும், 10 ஆண்டு முதல் ஆயுள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்று சட்டமசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இப்படியொரு சட்டம் முதன்முதலாக ராஜஸ்தானில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கார்கில் போர் நினைவு தினம்; பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?