தமிழை புறக்கணித்ததால் ரத்தான தபால் துறை தேர்வு செப் 15-ல் நடைபெறுகிறது
தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்காக கடந்த மாதம் தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்பு முடித்தவர்களை தகுதியாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
தமிழகத்தில், தமிழில் தேர்வு எழுத அனுமதி இல்லையா? என்று அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்வை கடுமையாக எதிர்த்தன. நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை தமிழக எம்பிக்கள் ஒட்டு மொத்தமாக கிளப்பினர்.
இந்த கடும் எதிர்ப்பைக் கண்டு பின் வாங்கியது மத்திய அரசு . இதனால், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அத்துடன் இனிமேல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்று ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வுகள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்களுடன் வைகோ சந்திப்பு ஏன்? கூட்டணிகள் மாற்றமா?