உ.பி.யில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணை கொல்ல சதி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

பலாத்காரஉ.பி.மாநிலம் உன்னாவ் நகரில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்கும் பதிவு செய்துள்ளது.

உ.பி.யின் பங்கர்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு, தனது வீட்டில் உன்னாவ் நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குல்தீப் சிங் செங்கார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பாஜக எம்எல்ஏ செங்கார் மீது போலீசில் பாலியல் புகார் அளித்தார். ஆனால் போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர்.

இதனால் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளிக்க முயன்றபோது தான் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரவியது. எதிர்க்கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பின. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் போராட்டம் நடத்திய அவருடைய தந்தையும் பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். காயங்களுடனே அவரை போலீசார் கைது செய்த நிலையில் உயிரிழந்ததும் பெரும் சர்ச்சையானது.

எதிர்க்கட்சிகளின் கண்டனம் வலுத்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை போலீஸார் கைது செய்தனர். இப்போதும் அவர் சிறையில் உள்ள நிலையில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்த வழக்கில், பாஜக எம்எல்ஏவின் ஆட்களால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தபடி உள்ளது. இதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் கடந்த 3 தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் உறவினர் சிலர் மற்றும் வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றனர். அப்போது இவர்கள் சென்ற காரின் மீது டிரக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டப் பெண் படுகாயமடைந்தார். உடன் சென்ற இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், வழக்கறிஞரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார். கார் மீது டிரக் மோதிய சம்பவம் விபத்து அல்ல, கொலை செய்ய நடத்திய திட்டமிட்ட சதி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனால் உன்னாவ் இளம் பெண் விவகாரம் மீண்டும் நாடுமுழுவதும் பெரும் பிரச்னையானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், பாதுகாப்பு கோரியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்து வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உ.பி அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய, மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதையடுத்து, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை விபத்துக்குள்ளாக்கிய வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்பட 10 பேர் மீது சிபிஐ இன்று முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கொல்ல முயற்சி; நாடாளுமன்றம் முன் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

More News >>