கர்நாடக புதிய சபாநாயகரானார் விஷ்வேஸ்வர் ஹெக்டே போட்டியின்றி தேர்வானார்

கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த விஷ்வேஸ்வர் ஹெக்டே காகேரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தால் குமாரசாமி தலைமையிலான 14 மாத கால காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவின் எடியூரப்பா முதல்வரானார்.

சட்டப்பேரவையில் திங்களன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடியூரப்பா குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமாரும் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக வசம் ஆட்சி கைமாறியதால் தம்மை சபாநாயகர் பதவியை விட்டு கீழிறக்க பாஜக முயற்சிக்கும் என்பதால் ரமேஷ்குமாரே முந்திக் கொண்டு ராஜினாமா செய்து விட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்த அரசியல் நெருக்கடிகளில் சிக்கி தூக்கத்தை தொலைத்தது போதும். இப்போது விடுதலை கிடைத்தது நிம்மதி என்று கூறி ரமேஷ்குமார் பதவியை துறந்தார்.

இதனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கு பாஜக சார்பில் விஷ்வேஸ்வர் காகேரி என்பவரை முன்னிறுத்தியது. இதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார். சபாநாயகர் பதவிக்கு, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் வேட்பாளர் யாரும் முன்னிறுத்தப்படவில்லை. இதனால் விஷ்வேஸ்வர் ஹெக்டே புதிய சபாநாயகராக போட்டியின்றி தேர்வானதாக இன்று அறிவிப்பு வெளியானது. அவருக்கு முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஷ்வேஸ்வர் காகேரி 1994 முதல் தொடர்ந்து 6 முறை பாஜக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.1994 முதல் 2008 வரை உத்தர கன்னடாவில் உள்ள அங்கோலா தொகுதியிலும், 2008 முதல் தற்போது வரை சிர்சா தொகுதியிலும் வெற்றி பெற்றார். கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்த போது விஷ்வேஸ்வரர் காகேரி அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ;கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் முடிவு

More News >>