பாக்.கிரிக்கெட் வீரரை மணக்கிறார் இந்தியப் பெண்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாசன் அலியை அரியானாவைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி பெண் ஒருவர், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாமியா அர்ஜூ. இங்கிலாந்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த ஷாமியா, துபாயைச் சேர்ந்த அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். ஷாமியாவும் அவருடைய பெற்றோரும் துபாயில் வசித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஹாசன் அலிக்கும் ஷாமியாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.துபாயில் ஷாமியாவின் நண்பர் ஒருவர் மூலம் ஹசன் அலியுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் இருவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்து காதலாகி, தற்போது திருமணம் வரை வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இருவரின் திருமணம் குறித்து, ஹாசன் அலி குடும்பத்தினரும், ஷாமியா குடும்பத்தினரும் துபாயில் சந்தித்துப் பேசிவிட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 20-ந் தேதி துபாயில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.இத்தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஜியோ சேனல் தெரிவித்துள்ளது. ஆனால், திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை
ஷாமியாவுடனான திருமணம் குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலியிடம் கேட்டதற்கு, என்னுடைய திருமணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது உண்மையே. ஆனால், இப்போது எதையும் உறுதியாக கூற முடியாது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்களை மணம் முடிப்பது இது முதல் முறையல்ல. இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான ஐதராபாத்தைச் சேர்ந்த சானியா மிர்ஸாவை, பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான ஷோயிப் மாலிக் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அதே போன்று பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஜாகீர் அப்பாசும் இந்தியப் பெண்ணையே மணம் முடித்திருந்தார்.
பாலிவுட் நட்சத்திரமாக திகழ்ந்த ரீனா ராயை, பாகிஸ்தான் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த மொயின் கான் திருமணம் செய்து, சில காலம் குடும்பம் நடத்தி பின்னர் பிரிந்து விட்டனர். இந்நிலையில் தான் அடுத்து ஒரு பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை இந்தியப் பெண் கரம் பிடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஒரு நாள் போட்டி ; விடை பெறுகிறார் இலங்கை வேகப்புயல் மலிங்கா'- வங்கதேசத்துடன் இன்று கடைசி மோதல்