தொடாமலே மாற்றும் தொழில்நுட்பம்: பிக்ஸல் 4 போனில் அறிமுகம்

ஸ்மார்ட்போனை தொடாமல், குரல் கட்டளை கொடுக்காமல் மாற்றங்களை செய்யக்கூடிய மோஷன் சென்ஸ் என்னும் அசைவறிதல் தொழில் நுட்பத்தை வரவிருக்கும் பிக்ஸல் 4 சாதனங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிராஜட் சோலி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனத்தின் குழுவினர் உழைத்து வருகின்றனர். ஆம்பியன்ட் கம்ப்யூட்டிங் என்னும் சூழலை கணிக்கும் திறன் அடிப்படையில் இத்தொழில் நுட்பம் செயல்படும்.

பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனில் முன்பக்க காமிரா மற்றும் ஒலிகேட்கும் இயர் பீஸ் அருகில் சோலி ரேடார் சிப் அமைக்கப்பட்டிருக்கும். இது பயனரின் கை மற்றும் உடல் அசைவுகளை புரிந்து கொள்ளும். பயனர் கையை அசைப்பதன் மூலம் அலாரத்தை நிறுத்துவது, அழைப்பு ஒலியினை அமர்த்துவது, இசையை மாற்றுவது போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும். பிஎம்டபிள்யூ 7 வகை கார்களில் உள்ள ஒலி கட்டுப்பாட்டு அமைப்பை போன்றதே இத்தொழில்நுட்பம் ஆகும்.

பயனரின் விரல்ரேகையை கொண்டு திறக்கும் முறை பிக்ஸல் 4 போனில் பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக, சோலி ரேடார் சிப் உதவியுடன் முகமறி கடவுச்சொல் பயன்படுத்தப்படும். முகமறி கடவுச்சொல் பல ஸ்மார்ட்போன்களில் இருந்தாலும், பிக்ஸல் 4 சாதனத்தில் கூடுதல் சிறப்புகளை கொண்டிருக்கும்.

பயனர் பிக்ஸல் 4 போனை நெருங்கியதும் சோலி சிப், முகமறி தொழில்நுட்பத்தை இயங்க செய்யும். தானாகவே பயனரின் முகத்தை அறிந்து போனை திறக்கச் செய்யும். முகமறி கடவுச் சொல் செயல்பாடு மிக வேகமாக இருக்கும். அதேபோன்று போன் எந்தக் கோணத்தில், அதாவது தலைகீழாக இருந்தால்கூட பயனரின் முகத்தை சரியாக உணர்ந்து கொள்ளும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் முகமறி கடவுச்சொல் பயன்பாட்டில் இருந்தாலும், போன் தலைகீழாகவும் வேறு கோணங்களிலும் இருக்கும்போது முகத்தை அறியும் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லுமிட விவரங்களை அழித்துவிடும் கூகுள்

More News >>